
வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா 0 – 2* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை இழந்துள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியும் 9 விக்கெட்டுகளை எடுத்ததால் வெற்றி உறுதியான மிதப்பில் அஜாக்ரதையாக செயல்பட்டு வெற்றியை நழுவ விட்ட இந்தியா இப்போட்டியிலும் 6 விக்கெட்களை எடுத்த மமதையில் கத்துக்குட்டி வங்கதேசம் என்ன செய்து விடப்போகிறது என்ற எண்ணத்துடன் செயல்பட்டதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இத்தனைக்கும் வங்கதேசத்தை விட உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டிருந்தும் கையில் வைத்திருந்த வெற்றியை பரிசளிக்கும் அளவுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியா இப்படி மோசமாக செயல்பட்டது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக வரும் 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை சமீபத்திய நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் துவங்கிய இந்தியா 1 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த நிலையில் இத்தொடரிலும் மண்ணை கவ்வியுள்ளது.
அதனால் 2022 ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை போன்ற சமீபத்திய அழுத்தம் வாய்ந்த பெரிய தொடர்களில் சொதப்பிய இந்தியா கொஞ்சமும் முன்னேற்றம் காணாத செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதால் 2023 உலக கோப்பையையும் வெல்லப் போவதில்லை என்று ரசிகர்கள் இப்போதே கவலை அடைந்துள்ளார்கள். பொதுவாகவே ஒரு உலகக்கோப்பை வெல்வதற்கு முதலில் ஒரு வருடம் முன்பாகவே நிலையான கேப்டன் தலைமையில் முக்கிய வீரர்கள் அனைவரும் தொடர்ந்து விளையாட வேண்டியது அவசியமாகும். அப்படி விளையாடினால் தான் நிறை குறைகளை தெரிந்து கொண்டு அனைத்து வீரர்களும் செட்டிலாகி இறுதியில் கோப்பையை வென்று சாதிக்க முடியும்.
ஆனால் இந்திய அணியிலோ குறிப்பாக புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோர் தலைமையில் சோதனை முயற்சி என்ற பெயரில் கடந்த ஒரு வருடமாகவே ஏராளமான மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அது போக பணிச்சுமை என்ற பெயரில் உலகக்கோப்பையில் விளையாடப் போகும் முக்கிய வீரர்களாக கருதப்படும் கேப்டன் ரோஹித் முதல் விராட் கோலி, பாண்டியா வரை அனைவரும் ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இந்த 2 அம்சங்களும் தோல்விக்கு மறைமுக காரணமாக அமைந்து வரும் நிலையில் வரும் ஜனவரி மாதம் முதல் 2023 உலக கோப்பையில் விளையாடுவார்கள் என்று கருதப்படும் முக்கிய வீரர்கள் அனைவரும் முதன்மை அணியில் ஓய்வு எடுக்காமல் விளையாடுவார்கள் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார். இது வரை செய்த மாற்றங்களால் கிடைத்த அடுத்தடுத்த தோல்விகளால் தமக்கு தாமே அதிருப்தி அடைந்துள்ள ராகுல் டிராவிட் வரும் 2023 புத்தாண்டில் நடைபெறும் நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்படாது என்று அறிவித்துள்ளார். இது பற்றி நேற்றைய தோல்விக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு.
“எங்கள் கண்ணோட்டத்தில் விளையாடுவது எளிதானதல்ல என்று நினைக்கிறேன். எங்களிடம் முதன்மையான அணி இல்லை. அதனால் காயங்களைப் பொறுத்து வரும் ஜனவரி முதல் நடைபெறும் தொடர்களில் நாங்கள் முதன்மை அணியை பெறுவோம். ஐபிஎல் தொடருக்கு முன்பாக எங்களுக்கு 9 ஒருநாள் போட்டிகள் உள்ளது. அதில் நாங்கள் ஒரு நிலையான அணியை விளையாடுவோம் என்று நம்புகிறேன். கடந்த 2 வருடங்களில் அடுத்தடுத்த டி20 உலகக் கோப்பைகள் இருந்ததால் நாங்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைய மாற்றங்களை செய்தோம்”
“அந்த வகையில் அடுத்த 8 முதல் 10 மாதங்களில் நாங்கள் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுக்க உள்ளோம். இருப்பினும் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் உட்பட்டு விளையாடுவது மிகவும் எளிதல்ல. மேலும் அடுத்ததாக டெஸ்ட் தொடர் நடைபெறுவதால் ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்கள் சற்று ஓய்வெடுக்க உள்ளார்கள்” என்று கூறினார். அதாவது வரும் ஜனவரி முதல் நடைபெறும் கிரிக்கெட் ஒருநாள் தொடர்களில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படாது என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.