அட போங்கப்பா வெ.இ டி20ல தோத்தா என்ன? அதுல சாதிச்ச நமக்கு 3 வெற்றி கிடைச்சுருக்கு – டிராவிட் பெருமையான பேட்டி

Rahul Dravid 3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற இந்தியா கடைசியாக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து நாடு திரும்பியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டியில் தோற்றாலும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று பதிலடி கொடுத்தது. இருப்பினும் கடைசி போட்டியில் தோற்ற இந்தியா வரலாற்றில் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தோல்வியை பதிவு செய்தது.

அதை விட தற்சமயத்தில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா உலக கோப்பைக்கு தகுதி பெறாமல் தடுமாறி வரும் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2016க்குப்பின் முதல் முறையாக ஒரு டி20 தொடரில் தோற்றதே ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் முதன்மை வீரர்கள் இல்லாமலேயே முதலிரண்டு போட்டிகளில் பின்தங்கியும் இளம் வீரர்களுடன் போராடிய இந்தியா வெறும் ஒரு போட்டி வித்தியாசத்தில் மட்டுமே தோற்றது மோசமான தோல்வியாகாது என்றே சொல்லலாம்.

- Advertisement -

டிராவிட் பெருமை:
மேலும் தோல்வியே வெற்றிக்கான முதல் படி என்பது போல் அடுத்த வருடம் இதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் 2024 டி20 உலகக்கோப்பைக்கு தேவையான சில தரமான இளம் வீரர்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளனர். குறிப்பாக தற்சமயத்தில் இந்திய பேட்டிங் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சம் காணப்படும் நிலையில் யசஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகிய 2 இடது கை வீரர்கள் அதற்கு தீர்வாக கிடைத்துள்ளார்கள்.

அதே போல காட்டுத்தனமான வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக அடிக்க முடியாத அளவுக்கு தன்னுடைய அறிமுக தொடரில் அசத்திய முகேஷ் குமார் வருங்கால வேகப்பந்து வீச்சாளராக கிடைத்துள்ளார். இந்நிலையில் இத்தொடரில் தோல்வியை சந்தித்தாலும் வருங்காலத்தை பலப்படுத்தப் போகும் 3 தரமான இளம் வீரர்கள் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தொடரின் முடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த தொடரில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு பெற்ற 3 இளம் வீரர்களும் எழுந்து நின்று சிறப்பாக செயல்பட்டனர். யசஸ்வி ஜெய்ஸ்வால் 4வது போட்டியில் அறிமுகமாகி சிறந்த இன்னிங்ஸ் விளையாடினார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் செய்ததை தம்மால் சர்வதேச அளவிலும் செய்ய முடியும் என்பதை அவர் எங்களுக்கு காட்டியது நல்ல அம்சமாகும். திலக் வர்மா மிடில் ஆர்டரில் கிடைத்துள்ள நல்ல வீரர் என்று நினைக்கிறேன். குறிப்பாக கடினமான சூழ்நிலைகளில் களமிறங்கிய அவர் நேர்மறையாக அடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பேட்டிங் செய்து இத்தொடர் முழுவதும் ஃபீல்டிங் துறையிலும் அசத்தினார்”

“அத்துடன் பந்து வீச்சில் ஒரு சில ஓவர்களையும் தம்மால் வீச முடியும் என்று எங்களுக்கு காண்பித்தார். எனவே வருங்காலங்களில் தரமான பவுலிங் கொண்ட எதிரணிக்கு எதிராக அவரைப் போன்ற ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விளையாடுவார் என்பது எங்களுக்கு கிடைத்துள்ள நல்ல அறிகுறியாகும். அதே போல முகேஷ் குமார் இந்த சுற்றுப்பயணத்தின் 3 வகையான தொடர்களிலும் அறிமுகமாகி அந்த வாய்ப்புகளை பிடித்துக் கொண்டார் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க:உலகக்கோப்பையில் இடம் கிடைக்குதோ, இல்லையோ, என் குறிக்கோள் இதுமட்டும் தான் – நடராஜன் வெளிப்படை

” குறிப்பாக டெத் ஓவர்களில் முரட்டுத்தனமாக பவராக அடிக்கும் ஹிட்டர்களுக்கு எதிராக அவர் தைரியமாக பந்து வீசினார். சர்வதேச அளவில் வெறும் 4 – 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியுள்ளார். அந்த வகையில் இந்த அறிமுக வீரர்கள் வருங்காலங்களில் எங்களின் வெற்றிகளில் உதவுவார்கள் என்று நம்புகிறேன். அத்துடன் அடுத்ததாக நடைபெறும் அயர்லாந்து தொடரிலும் இன்னும் அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்” என்று கூறினார்.

Advertisement