இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில் நேற்று (27/07/21) நடைபெற இருந்த இரண்டாவது டி20 போட்டி இன்று (28/07/21) ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியாவிற்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக இந்தப் போட்டியானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இரு அணி வீரர்களும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் இந்த இரண்டாவது போட்டி நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் க்ருனால் பாண்டியவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் நெகட்டிவ் என்று வந்துள்ளதால் இன்றைய போட்டி நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால் இந்திய அணியில் க்ருனால் பாண்டியவால் விளையாட முடியாது. இதன்காரணமாக 2 ஆவது டி20 போட்டியில் க்ருனால் பாண்டியாவிற்கு பதிலாக இந்திய அணியில் யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி அவரது இடத்திற்காக இந்திய அணியில் 3 வீரர்கள் காத்திருக்கின்றனர்.
ஆனாலும் சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சாகருக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே 3-வது ஒருநாள் போட்டியின்போது அறிமுகமான ராகுல் சாகர் இலங்கை அணி எளிதாக வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் சிறப்பாக பந்துவீசி அவர்களைத் திணறடித்தார். இதன் காரணமாக நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி ராகுல் சாஹருடன் களமிறங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஏற்கனவே இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருப்பதால் பந்துவீச்சில் ஒரு நபரை சேர்ப்பதில் எந்த தவறும் இல்லை. இதன் காரணமாக இன்று ஹர்டிக் பாண்டியா முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று தெரிகிறது.