ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த 21 வயதான இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரஹ்மனுல்லா குர்பாஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 43 டி20 போட்டிகள் மற்றும் 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்காக குறுகிய காலத்திலேயே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னணி வீரராக மாறிய அவர் உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 மற்றும் டி10 லீக் போட்டிகளில் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
ரஹ்மனுல்லா குர்பாஸ் ஒரு அதிரடியான ஓப்பனர் என்பதன் காரணமாக எங்கு சென்றாலும் அவருக்கு வரவேற்பு இருந்து வருகிறது. இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் அவர் இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக பங்கேற்று தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார். இந்நிலையில் முதல்முறை ஐபிஎல் தொடரின் போது தோனியை சந்திக்கையில் என்ன நடந்தது? அவர் என்னவெல்லாம் தனக்கு கூறினார்? என்பது குறித்து ரஹ்மனுல்லா குர்பாஸ் மனம்திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : நான் 2022-ஆம் ஆண்டு முதல்முறை தோனி அவர்களை சந்திக்கும்போது குஜராத் அணியில் இருந்தேன். அப்போது நான் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடும் வாய்ப்பையும் பெறவில்லை. அந்த நேரத்தில் மிகுந்த அழுத்தத்தில் இருந்த நான் அவரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. என்னால் அவரிடம் பேசவும் முடியவில்லை. அந்த அளவிற்கு பிரஷரில் இருந்தேன்.
ஆனால் அவர் என்னுடைய அந்த அழுத்தமான மனநிலையை புரிந்து கொண்டு என் தோள்மீது கை போட்டு எனக்கு ஆறுதலாக பல விஷயங்களை எடுத்துரைத்தார். அதேபோன்று அவர் எனக்கு அறிவுரை கொடுத்த விதம் எனக்கு மிகவும் நம்பிக்கையை கொடுத்தது. அதன் பிறகு சில வார்த்தைகளை நான் அவரிடம் பேசினேன். ஆனால் இம்முறை இந்த ஆண்டு தோனியை சந்தித்தபோது மிகவும் நம்பிக்கையுடன் அவரிடம் பேசினேன்.
நீண்ட நேரம் என்னுடைய கிரிக்கெட், தனிப்பட்ட வாழ்க்கை முறை என பல்வேறு விடயங்களை பற்றி பேசினேன். மேலும் என்னுடைய கிரிக்கெட் மற்றும் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு உயர்த்துவது? எப்படி அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவது என பல கேள்விகளை அவரிடம் கேட்டேன். அதற்கும் அவர் என்னிடம் மிகப் பொறுமையாக பல்வேறு குறிப்புகளை வழங்கினார். அவர் வழங்கிய ஆலோசனைகளை நான் எனது புத்தகத்தில் எழுதி வைத்துள்ளேன்.
இதையும் படிங்க : என்னையா உருட்டா இருக்கு? விளையாடியது வெறும் 8 நாள், அதுக்குள்ள ரெஸ்ட்டா – விராட், ரோகித்தை விளாசிய முன்னாள் வீரர்
அவருடைய பேச்சு என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது. என்னுடைய கரியரில் நிச்சயம் நான் உயர்வதற்கு தோனியின் வார்த்தைகள் உதவியாக இருக்கும். அவரே என்னுடைய ரோல் மாடல் என ரஹ்மனுல்லா குர்பாஸ் கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை தொடர்ந்து தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் இலங்கை பிரீமியர் லீக் தொடரிலும் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஜாப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.