சிட்னி போட்டியில் பண்ட் இதனை செய்யாதது வருத்தமளிக்கிறது. அவர் உண்மையிலே தகுதியானவர் – ரஹானே பேட்டி

Rahane

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய விளையாடிய இந்திய அணி பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தினால் தோல்வியில் இருந்து மீண்டு போட்டியை டிராவில் முடித்தது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் வீரரான ரிஷப் பண்ட் இந்த போட்டியில் 5 ஆவது வீரராக விஹாரிக்கு முன்னர் களமிறங்கி அதிரடியாக விளையாடி 97 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணியை அலறவிட்டார்.

Pant

அதுமட்டுமின்றி புஜாரா 77 ரன்கள் குவிக்க அடுத்து வந்த அஸ்வின் மற்றும் விகாரி ஆகியோர் கிட்டத்தட்ட 40 ஓவர்களுக்கு மேல் கூட்டணி அமைத்து தோல்வியிலிருந்து இந்திய அணியை காப்பாற்றி போட்டியை டிரா செய்தனர். இந்த போட்டியை இந்திய அணி டிரா செய்ததும் பல்வேறு தரப்பில் இருந்தும் இந்திய அணியின் வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் கடைசி நாளில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி எளிதில் தோற்றுவிடும் என்று சிலர் ஏளனமாக கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்நிலையில் ஆறாவதாக இணைந்த விகாரி மற்றும் அஸ்வின் ஜோடி ஆட்டத்தின் போக்கையே மாற்றி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் அவர் போராடிய விதத்தை அனைவரும் மனதார பாராட்டி வருகின்றனர். கடைசிவரை ஆஸ்திரேலிய பவுலர்களால் பிரிக்க முடியாமல் இந்த ஜோடி சிறப்பாக தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. ஆட்டத்தின் முடிவில் 130 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 334 ரன்கள் எடுத்தது.

Vihari

விகாரி 161 பந்துகளில் 23 ரன்களும், அஸ்வின் 128 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரகானே இதுகுறித்துக் கூறுகையில் : இந்த டெஸ்ட் போட்டியில் விஹாரியின் சிறப்பான இன்னிங்சை அனைவரும் பார்த்தோம். அவர் ஆடிய விதம் 2019ஆம் ஆண்டு வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக அடித்த சதத்தை விட சிறந்த ஒன்றாகும்.

- Advertisement -

காயமடைந்தும் அவர் இந்திய அணிக்காக போராடி தோல்வியில் இருந்து மீண்டு டிராவிற்கு கொண்டு வந்துள்ளார். நெருக்கடிக்கு மத்தியில் அவர் சிறப்பாக விளையாடியது அவரது போராட்ட குணத்தை வெளிக்காட்டுகிறது. இந்த போட்டியில் கிடைத்த டிரா வெற்றிக்கு நிகரானது. மேலும் பண்ட் இந்த போட்டியில் சதம் அடிக்காதது வருத்தமளிக்கிறது. அவர் சதம் அடித்திருக்க தகுதியானவர் என்றும் இந்த அனைத்து பாராட்டுகளும் விஹாரி, அஸ்வின், ரிஷப் பண்ட், புஜாரா ஆகிய நான்கு பேரையே சேரும் என ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.