ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 156 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 31, சூரியகுமார் யாதவ் 29, தீபக் சஹர் 28* ரன்கள் எடுத்தனர்.
அடுத்ததாக விளையாடிய சென்னைக்கு சிவம் துபே, ஹூடா, சாம் கரன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் கேப்டன் ருத்ராஜ் அதிரடியாக விளையாடி 53 (26) ரன்கள் எடுத்தார். அதே போல மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்தரா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி சென்னையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.
அசத்திய ரச்சின்:
கடைசி நேரத்தில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா 17 ரன்னில் அவுட்டானதால் தோனி களமிறங்கினார். நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்று சேப்பாக்கம் மைதானத்தில் ஒலித்த கேப்டன் விஜயகாந்த் பாடலுக்கு மத்தியில் களமிறங்கிய அவருக்கு சிஎஸ்கே ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். மேலும் தோனி பௌண்டரி அல்லது சிக்ஸர் அடித்து போட்டியை முடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இருப்பினும் 19வது ஓவரின் கடைசி 2 பந்தில் தோனி ரன் எடுக்கவில்லை. அதனால் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ரவீந்திரா சிக்ஸர் அடித்து 65* ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அந்த வகையில் போராடி வென்ற சென்னை இத்தொடரை வெற்றிகரமாக துவங்கியது. மும்பைக்கு இளம் வீரர் விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
வெறித்தனமான ரசிகர்கள்:
இந்நிலையில் இப்போட்டியில் மும்பை சிறப்பாக பவுலிங் செய்து தங்களை சோக் செய்து தோற்க வைக்க முயற்சித்ததாக ரவீந்திர கூறியுள்ளார். அதையும் தாண்டி வென்றது மற்றும் தோனிக்கு கிடைத்த வரவேற்பு பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நல்ல லென்த்தில் வீசிய மும்பை அணி மிடில் ஆர்டரில் சோக் செய்ய வைத்து எங்களது வேலையை கடினமாக்கினர். ஆனால் லோயர் மிடில் ஆர்டரில் எங்களிடம் உள்ள பவர் வெற்றிக்கு உதவியது”
இதையும் படிங்க: சி.எஸ்.கே அணிக்கெதிரான டக் அவுட்.. ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனை – ஹிட்மேனுக்கு நேர்ந்த சோகம்
“இந்த பிட்ச்சில் என்ன எதிர்பார்ப்பது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. கடினமாக முயற்சிக்காமலேயே ருதுராஜ் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது அபாரமானது. பாகிஸ்தான் முத்தரப்பு தொடரில் சந்தித்த காயம் நன்றாகி விட்டது. அதற்காக எங்களது நியூசிலாந்து அணி மருத்துவருக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். பிட்ச் பெரிதாக சுழலுக்கு சாதகமாக இல்லையென்றாலும் மும்பை அணி சரியான லென்தில் வீசியது எங்களுக்கு கடினமாக இருந்தது. தோனி பேட்டிங் செய்ய வந்த போது சிஎஸ்கே ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினர். அவர்கள் தோனி ஃபினிஷிங் செய்வதை விரும்பினார்கள்” என்று கூறினார்.



