
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வகையான ஐ.சி.சி கோப்பைகளையும் வென்று கொடுத்த பெருமையை உடையவர். அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடர்களிலும் ஐந்து முறை சென்னை அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். ஒரு சிறந்த கேப்டனாக திகழ்ந்தது மட்டுமின்றி சிறந்த விக்கெட் கீப்பராகவும் அவர் தனது கரியரில் மற்ற விக்கெட் கீப்பர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.
விக்கெட் கீப்பிங்கில் அசத்தும் அவர் போட்டிக்கு முன் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்ததை நம்மால் பார்த்திருக்க முடியாது. ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே அவர் விக்கெட் கீப்பிங் பயிற்சியின்றி நேரடியாக போட்டிகளில் களத்திற்குள் வந்து கீப்பிங்கில் அற்புதமாக செயல்படுவார். அவருடைய மின்னல் வேக ஸ்டம்பிங்கிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்றால் அது மிகையல்ல.
அதேபோன்று எப்படிப்பட்ட கேச்சுகளையும் அவர் மிக எளிதாக பிடிக்கக் கூடியவர். இந்நிலையில் தோனி ஏன் விக்கெட் கீப்பிங் பயிற்சியை போட்டிக்கு முன்னர் செய்வதில்லை என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளரான ஆர்.ஸ்ரீதர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட துவங்கிய போது கீப்பிங் பயிற்சியை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். இந்திய அணிக்காக அறிமுகமாவதற்கு முன்னர் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் கடுமையாக உழைத்த அவர் இந்திய அணியில் இடம் பிடித்த பிறகு போட்டிக்கு முன் விக்கெட் கீப்பிங் பயிற்சி எடுப்பதை நிறுத்திக் கொண்டார்.
அதற்கு காரணம் யாதெனில் : ஏற்கனவே போட்டிகளின் போது வேகமாக வரும் பந்துகளை பிடிப்பதனாலும், பீல்டர்கள் அடிக்கும் த்ரோக்களை சேகரிப்பதாலும் தனது கைவிரல் தீவிரமாக பாதிக்கப்பட்டதை அவர் உணர்ந்தார். பந்துகள் கை விரலில் பட்டு பல காயங்களை சந்தித்த அவர் பல போட்டிகளில் வலியுடன் விளையாடியுள்ளார்.
இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் இந்த கஷ்டம் எல்லாம் இருக்கும்.. ரோஹித் சர்மா அளித்த பேட்டி – விவரம் இதோ
எனவே போட்டிக்கு முன்பாகவும் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்யும் போது பந்துகளை பிடிக்க வேண்டாம் என்றும் அதனால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கவே அவர் கீப்பிங் பயிற்சி செய்வதில்லை இருப்பினும் விக்கெட் கீப்பிங் பயிற்சி இல்லை என்றாலும் களத்திற்குள் வந்து அவர் கீப்பிங் செய்யும் விதம் அபரிவிதமான ஒன்று என ஆர்.ஸ்ரீதர் கூறியது குறிப்பிடத்தக்கது.