5 வருடமாகியும் முன்னேறல – ஷ்ரேயஸ் ஐயரின் ஆசிய கோப்பை வாய்ப்பு பறிபோன காரண பின்னணியை பகிரும் முன்னாள் கோச்

Shreyas-iyer
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் வரும் ஆகஸ்ட் 27 முதல் துவங்கும் வரலாற்றின் 15-ஆவது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாக செயல்படும் அந்த தொடரில் கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்களுடன் பார்மின்றி தவிக்கும் விராட் கோலி சமீபத்திய தொடர்களில் அசத்திய சூர்யகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, அரஷ்தீப் சிங் போன்ற சீனியர் வீரர்களும் இளம் வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் இந்த தொடரிலிருந்து காயத்தால் வெளியேறியுள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Shreyas

- Advertisement -

இந்த அணியில் நேரடி 15 பேர் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் 3 பேர் கொண்ட காத்திருப்பு பட்டியலில் மட்டுமே இடம் பிடித்துள்ளார். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் திறமை பெற்றுள்ள இவர் சுழல் பந்துவீச்சாளர்களை புலியாக அடிப்பதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்துகளில் பூனையாக சொற்ப ரன்களில் அவுட்டவதுமே அவரின் இந்த நிலைமைக்குக் காரணமாகும். கடந்த பிப்ரவரியில் சொந்த மண்ணில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அந்த அணியின் சுழல் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய இவர் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தூளாக்கினார்.

பறிபோன வாய்ப்பு:
அதன்பின் நடந்த ஐபிஎல் 2022 தொடரில் கொல்கத்தாவின் கேப்டனாக 400 ரன்களை தாண்டாத இவர் பின்னர் நடந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாற்றமாக செயல்பட்டார். குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு திணறுவார் என்பதை ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்பட்ட போது நன்கு தெரிந்து வைத்திருந்த பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் பயிற்சியாளராக செயல்பட்டபோது பால்கனியில் அமர்ந்து கொண்டு ஒற்றை செய்கையால் காலி செய்தது வைரலானது.

Mccullum-and-Shreyas

அதனால் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தடுமாறுவார் என்ற இவரின் பலவீனம் தற்போது உலக அளவில் பிரபலமடைந்துள்ளது. அதை தெரிந்துகொண்ட எதிரணிகள் அவர் களமிறங்கும் போதெல்லாம் அந்த பந்துகளை வீசி கச்சிதமாக சோளியை முடித்து விடுகின்றனர். அதனால் விரைவில் இந்தப் பிரச்சனையை சரி செய்யுமாறு வாசிம் ஜாபர் ஷார்ட், ஸ்காட் ஸ்டைரீஸ் போன்ற முன்னாள் வீரர்கள் அவரை கேட்டுக் கொண்டனர். இருப்பினும் அதில் முன்னேற்றமடையாத அவர் அதுபோக டி20 கிரிக்கெட்டில் டெஸ்ட் இன்னிங்ஸ் போல மெதுவாக பேட்டிங் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -

2018 முதல்:
அதனாலேயே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் தடுமாறுவார் என்பதை உணர்ந்துள்ள தேர்வுக்குழு ஆசிய கோப்பையில் அவரை தேர்வு செய்யவில்லை. இந்நிலையில் 2017இல் அறிமுகமான ஸ்ரேயாஸ் அய்யர் 2018 முதலான ஆரம்ப காலகட்டத்திலிருந்தே இந்த பிரச்சனைக்கு தடுமாறி வருகிறார் என்று தெரிவித்துள்ள முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் 5 வருடங்களாகியும் இன்னும் அவர் அதில் முன்னேறவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2018 தென் ஆப்ரிக்க தொடரில் மோர்னே மோர்கல் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களிடம் தடுமாறிய பின்னணியை சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்து பேசியது பின்வருமாறு.

Sridhar

“ஷ்ரேயஸ் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அதிக ரன்களை குவிக்கும் வீரர் கிடையாது. அந்த மாதிரியான பந்துகளில் நிறைய போட்டிகளில் அவர் கையுறையில் எட்ஜ் வாங்கி விக்கெட் கீப்பரிடம் அல்லது மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுப்பது அல்லது டீப் ஸ்கொயர் லெக் பகுதியில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி விடுவார். அவர் ஷார்ட் பந்துகளை எளிதாக அடிக்கும் ரோகித் சர்மா போன்றவர் கிடையாது. அதை முயற்சி செய்யும் அவர் அத்தனை தருணங்களிலும் பைன் லெக் பகுதியில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி விடுகிறார்”

“ஒருமுறை (2018) அவர் களமிறங்கியதும் மோர்னே மோர்கல் அந்த பந்தை வீசி சோதித்தபோது உடனடியாக தேர்ட் மேன் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது ரவிசாஸ்திரி அருகில் அமர்ந்திருந்த நான் “சார் இவர் இந்த பந்துகளில் கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறினேன். அவரும் அதை பார்த்துவிட்டு இவர் மிகவும் தடுமாற போகிறார் என்று என்னிடம் கூறினார். ஆனால் தற்போதெல்லாம் அவரின் பலவீனத்தை தெரிந்து வைத்து அனைத்து பவுலர்களும் அவருக்கு அந்த பந்துகளை வீசுகிறார்கள். இருப்பினும் அவர் எஞ்சிய அனைத்து பந்துகளை எதிர்கொள்ளும் திறமை கொண்டவர். இந்த பந்துகளை சமாளிக்க அவரிடம் திறமையில்லை என்று அர்த்தம் கிடையாது. அதை எதிர்கொள்ள அவருக்கு நல்ல மன தைரியம் வேண்டும்” என்று கூறினார்.

Advertisement