சர்வதேச அரங்கில் சமீப காலங்களாகவே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி மிகப்பெரிய எழுச்சி கண்டு வருகிறது. குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானையும் வீழ்த்தியது. அதே வேகத்தில் 2024 டி20 உலகக் கோப்பையில் மிரட்டிய அந்த அணி இந்தியாவுக்கே சவாலை கொடுக்கக்கூடிய நியூசிலாந்தை தோற்கடித்து வெளியேற்றியது.
மேலும் அத்தொடரில் அபாரமாக விளையாடிய ஆப்கானிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக ஐசிசி தொடரின் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. முன்னதாக 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு முக்கிய பங்காற்றினார். அதே போல இங்கிலாந்தின் ஜோனதன் ட்ராட், வெஸ்ட் இண்டீஸின் ட்வயன் ப்ராவோ ஆகியோரும் ஆப்கானிஸ்தானின் வெற்றிகளில் பயிற்சியாளர்களாக பங்காற்றி வருகின்றனர்.
இந்தியாவின் ஆர் ஸ்ரீதர்:
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 1 டெஸ்ட் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. அந்த 2 தொடர்களுக்கும் இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தங்களுடைய துணைப் பயிற்சியாளராக செயல்படுவார் என்று ஆப்கானிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த ஆர் ஸ்ரீதர் 35 முதல் தரம் மற்றும் 15 லிஸ்ட் ஏ உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் லெவல் 3 பயிற்சியாளர் சான்றிதழையும் பெற்றுள்ள அவர் 2017 முதல் 2021 வரை இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார். அந்த வகையில் நல்ல அனுபவத்தை கொண்டுள்ள ஸ்ரீதரை நீண்ட காலத்துக்கு தங்களுடைய அணியின் பயிற்சியாளராக நியமிக்க ஆலோசித்து வருவதாகவும் ஆப்கானிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் பயிற்சியாளர்:
இது பற்றி ஆப்கானிஸ்தான் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு. “நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரீதர் துணைப் பயிற்சியாளராக நீக்கப்படுகிறார் என்பதை ஆப்கானிஸ்தான் வாரியம் குறிப்பிடுகிறது. ஸ்ரீதர் தனது பாத்திரத்தை திறம்பட நிரப்ப ஆப்கானிஸ்தான் விரும்புகிறது”
இதையும் படிங்க: பி.சி.சி.ஐ செயலாளரான ஜெய் ஷாவிற்கு கிடைக்க உள்ள புதிய பதவி – மற்ற நாட்டு நிர்வாகங்களும் ஆதரவு
“எதிர்காலத்தில் அவருடன் நீண்ட காலம் ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று நம்புகிறோம். ஸ்ரீதர் லெவல் 3 தரச் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளராக உள்ளார். அவர் இந்திய அண்டர்-19 தேசிய அணியில் உதவி பயிற்சியாளராகவும் சுழல் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். 2 ஐசிசி ஒருநாள் மற்றும் 2 டி20 உலகக் கோப்பை உட்பட 300க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் அவர் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார்” என்று கூறினார்.



