
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டிகள் டி20 அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்ற நிதர்சனமான உண்மையை ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். போதாக்குறைக்கு 2 பந்துகள் பயன்பாடு போன்ற விதிமுறைகள் ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த விறுவிறுப்பையும் உண்டாக்குவதில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார்.
அது போன்ற சூழ்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டை 40 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடத்த வேண்டுமென ரவி சாஸ்திரி, சாகித் அப்ரிடி போன்ற முன்னாள் வீரர்கள் சமீப காலங்களில் ஆலோசனை தெரிவித்தனர். ஆனால் தம்மைப் பொறுத்த வரை வெள்ளைப் பந்துக்கு பதிலாக சிவப்பு பந்தை பயன்படுத்துவதே ஒருநாள் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கான சிறந்த வழி என்று ரவிச்சந்திரன் அஸ்வின் வித்தியாசமான ஆலோசனை கூறியுள்ளார்.
அதை 2027 உலகக்கோப்பைக்கு முன் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரை ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஏதேனும் வருங்காலம் இருக்கிறதா? என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த விஷயத்தில் நீங்கள் நேர்மையுடன் பேச வேண்டும்”
“4 மணி நேரத்திற்குள் முடிந்து விடும் டி20 போட்டிகள் ரசிகர்களை கவர்கிறது. ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் வளர்வதற்கு உள்ளூர் டெஸ்ட் போட்டிகள் முக்கியம். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் எந்தப் போட்டியும் இல்லை. 2013 – 2014 காலகட்டங்களில் ஒரு பந்தை மட்டும் வைத்து ஒருநாள் போட்டிகள் நடைபெற்றது. அதன் பின் 2 புதிய பந்துகள், உள்வட்டத்திற்குள் 5 ஃபீல்டர்கள் போன்ற விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது”
“அது பல வகைகளிலும் இந்திய ஸ்பின்னர்களின் தாக்கத்தைக் குறைக்கிறது என்பது என்னுடையக் கருத்து. அதே காரணத்தால் ரிவர்ஸ் ஸ்விங் தற்போது முற்றிலுமாக சென்று விட்டது. விரல் ஸ்பின்னர்களின் தாக்கம் குறைந்து விட்டது. தென்னாபிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பை ஐசிசிக்கு சவாலாக இருக்கும்”
இதையும் படிங்க: இந்தியாவை தோற்கடிப்போம் என்று வாய் சவால் விட்டு.. பரிதாபமாக வீட்டுக்கு மூட்டை கட்டிய 3 அணிகள்.. சிறப்பு பதிவு
“அந்தத் தொடர் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஏனெனில் ஒருநாள் போட்டிகள் மெதுவாக செல்கிறது. ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிகள் சிவப்பு நிற பந்தில் விளையாடப்பட்டன. எனவே இது ஒருநாள் கிரிக்கெட்டில் அதை மீண்டும் கொண்டு வருவதற்கான சிந்தனைகளை சிந்திக்க வேண்டிய சீரியஸான நேரமாகும்” என்று கூறினார்.