
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி சூப்பர் 4 போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. அதில் இலங்கையை சூப்பர் ஓவரில் தோற்கடித்த இந்தியா திரில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 202/5 ரன்கள் அடித்தது. அடுத்து விளையாடிய இலங்கை அணியும் 20 ஓவரில் 202/5 ரன்கள் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் அபாரமாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் இலங்கைக்கு எதிராக 2 விக்கெட்டுகள் எடுத்து 2 ரன்கள் மட்டும் கொடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு ஹசரங்கா வீசிய சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே கேப்டன் சூரியகுமார் 3 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார். முன்னதாக அப்போட்டியில் ஹர்ஷித் ராணா மிகவும் மோசமாக பந்து வீசி இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தார்.
குறிப்பாக முதல் 3 ஓவரில் 44 ரன்கள் கொடுத்த அவர் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது 1 விக்கெட் எடுத்த போதிலும் 12 ரன்களை வழங்கினார். அதிலும் குறிப்பாக கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது அக்சர் பட்டேல் பந்தை தவற விட்டதைப் பார்க்காத சனாக்கா டைவ் அடித்து விட்டார். ஒருவேளை அவர் பந்தை பார்த்து 3வது ரன்னை எடுத்திருந்தால் இந்தியா தோற்றிருக்கும் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் இலங்கை பேட்ஸ்மேன்கள் மிகவும் எளிதாக கணித்து அடிக்கும் வகையில் ஹர்ஷித் ராணா பவுலிங் செய்ததாக முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்துள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “ராணா பற்றி நான் பேச விரும்புகிறேன். சில போட்டிகளில் விளையாடிய அவர் சில போட்டிகளில் விளையாடவில்லை. ஒரு போட்டியில் அமர்ந்து மற்றொரு போட்டியில் விளையாடினால் உங்களுடைய தன்னம்பிக்கை நன்றாக இருக்காது”
“ஆனால் இலங்கைக்கு எதிராக ராணா செய்த தவறுகள் மிகவும் சுமாராக இருந்தது. ஏனெனில் அவருடைய பந்து வீச்சால் பவர்பிளே ஓவரிலேயே போட்டி முடிந்து விட்டது என்று நினைத்தேன். ஆனால் இந்தியா அபார கம்பேக் கொடுத்து வென்றனர். ராணா தன்னுடைய வேகத்தில் சீராக செயல்படவில்லை. ஒரு பந்தை எதிரணி பேட்ஸ்மேன் தலையில் அடித்த அவர் மற்றொரு பந்தை மெதுவாக வீசினார்”
இதையும் படிங்க: தடுமாறி வென்றது இந்தியாவின் நன்மைக்கே.. சூரியகுமார் ஃபார்முக்கு வர இதை செய்யனும்.. கவாஸ்கர் அட்வைஸ்
“அதை நிசாங்கா மிகவும் அழகாக அடித்தார். குறிப்பாக ராணா ஒரு பந்தை மெதுவாகவும் அடுத்த பந்தை வேகமாகவும் போட்டார். ஒரு பந்து வேகம், அடுத்தப் பந்து மெதுவாக, அதற்கடுத்தப் பந்து வேகமாக, அதற்கடுத்தப் பந்து மெதுவாக என்ற வகையில் ராணா வீசினார். இது கிரிக்கெட்டை விளையாடுவதற்கான மிகவும் முதிர்ச்சியற்ற வழியாகும். இதிலிருந்து அவர் உண்மையில் கற்க வேண்டும்” என்று கூறினார்.