
இந்திய கிரிக்கெட் அணி மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது. அந்தப் போட்டியில் 3வது இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இந்தியா 0/2 என ஆரம்பத்திலேயே சரிந்தது. அதனால் இன்னிங்ஸ தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவை கேப்டன் கில் 103, ராகுல் 90 ரன்கள் அடித்து காப்பாற்றினார்கள்.
அடுத்து விளையாடிய சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோர் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து இந்தியாவை முன்னிலை பெற வைத்து சதத்தை நெருங்கினார்கள். அப்போது வெற்றி பெற முடியாது என்று உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று இந்தியாவை வற்புறுத்தினார். ஆனால் அதற்கு கேப்டன் கில் சம்மதிக்காததை தொடர்ந்து விளையாடிய சுந்தரும் ஜடேஜாவும் சதத்தை அடித்த பின் இந்தியா போட்டியை முடித்துக் கொண்டது.
இந்நிலையில் அச்சமயத்தில் இந்தியாவை டிரா செய்யுமாறு வற்புறுத்திய ஸ்டோக்ஸ், ஜாக் கிராவ்லி ஆகியோரை ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “எப்போதாவது நீங்கள் இரட்டை நிலையைப் பற்றி கேள்விப் பட்டுள்ளீர்களா? அதற்கான அர்த்தத்தை இங்கிலாந்து கடைசி 10 நிமிடங்களில் காண்பித்துள்ளது”
“நான் விரக்தியடைந்து கையைக் கொடுக்கிறேன், அதனால் நீங்களும் சத்தத்தை அடிக்காதீர்கள் என்று இங்கிலாந்து சொன்னார்கள். எங்களைப் போலவே நீங்களும் அழுது கொண்டே வெளியேறுங்கள் என்று இங்கிலாந்து சொன்னார்கள். அது எப்படி சாத்தியமாகும்? ஏனெனில் சுந்தர், ஜடேஜா உங்களது அனைத்து பவுலர்களையும் எதிர்கொண்டு போட்டியை டிராவை நோக்கி எடுத்துச் சென்றுள்ளார்”
“காலையிலிருந்து கடினமாக உழைத்து அந்த நிலைக்கு வந்த அவர்கள் சதத்தை விட்டுவிட்டு செல்ல வேண்டுமா? நீங்களோ ஹரி ப்ரூக்கிற்கு எதிராக சதத்தை அடிக்க விரும்புகிறீர்களா? என்று அவர்களிடம் கேட்கிறீர்கள். இல்லை சகோதரரே (ஸ்டோக்ஸ்). எங்கள் வீரர்கள் சதத்தை அடிக்க விரும்பினார்கள். உங்களால் முடியாவிட்டால் ஸ்டீவ் ஹார்மிஷன், ஆண்ட்ரூ ஃபிளின்டாப் ஆகியோரையும் கொண்டு வாருங்கள். எங்களுடைய வீரர்கள் அவர்களை எதிர்கொள்ள மறுக்க மாட்டார்கள்”
இதையும் படிங்க: 5 ஆவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? விளக்கம் கொடுத்த – கேப்டன் கில்
“ஹரி ப்ரூக்கை பவுலிங் செய்ய வைத்தால் அது உங்களுடைய தவறு, எங்களது தவறல்ல. கிரிக்கெட்டின் நேர்மைத்தன்மையை புரிந்த ஒரு சர்வதேச கேப்டனான நீங்கள் முடிந்திருந்தால் ஹரி ப்ரூக்கை 15 ஓவர்கள் வீச வைத்திருக்க வேண்டும். ஜாக் கிராவ்லி “நீங்கள் இப்படித்தான் சதத்தை அடிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் வேகமாக சதத்தை அடித்திருக்க வேண்டும்” என்று ஜடேஜாவிடம் சொன்னார். உண்மையில் அது எங்கள் வீரர்களின் விருப்பம். ஒருவேளை நீங்கள் வேகமாக சதம்டிக்க விரும்பினால் அவுட்டாகி செல்லுங்கள். அது உங்களுடைய ஆட்டம்” என்று கூறினார்.