ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் 3க்கு 3 வெற்றிகளைப் பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. அடுத்து நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் முதல் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக தோற்கடித்தது. செப்டம்பர் 21ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் பாகிஸ்தான் 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதைத் துரத்திய இந்தியா 18.5 ஓவரிலேயே இலக்கைத் தொட்டு 2வது முறையாக பாகிஸ்தானை எளிதாக தோற்கடித்தது. இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா 74, சுப்மன் கில் 47, திலக் வர்மா 30* ரன்கள் எடுத்து அசத்தினார்கள். முன்னதாக இத்தொடரில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அபிஷேக் சர்மா தம்முடைய சொந்த ஸ்கோரை பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்து வருகிறார்.
தோனி போல:
அந்த சுயநலமற்ற அணுகுமுறையில் இதுவரை 4 போட்டிகளில் 173* ரன்களை அடித்துள்ள அபிஷேக் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் ஜொலிக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக சாய்ம் ஆயுப் வீசிய 8வது ஓவரின் 5வது பந்தை கொஞ்சம் இடது பக்கம் சென்ற அபிஷேக் சர்மா வலது பக்கமாக இழுத்து அடித்தார்.
அது கிட்டத்தட்ட தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் போல எக்ஸ்ட்ரா கவர் திசைக்கு மேல் பவுண்டரியாக பறந்தது. அந்த குறிப்பிட்ட ஷாட்டை வியந்து பாராட்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் வருங்காலங்களில் அபிஷேக் சர்மா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தம்முடைய குருவான யுவ்ராஜ் சிங் போல வருவார் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு.
யுவ்ராஜ் போல வருவாரு:
“எம்எஸ் தோனி ஹெலிகாப்டர் ஸ்டைலில் அபிஷேக் ஷர்மா இன்சைட் அவுட் கவர் டிரைவ் அடித்தார். அனைவரும் அவர் அடித்த 5 சிக்ஸர்கள் பற்றி பேசுகிறார்கள். ஆனால் நான் அந்த கவர் டிரைவ் பற்றி பேச விரும்புகிறேன். ஏனெனில் அந்த ஷாட்டில் அவ்வளவு கச்சிதத்தன்மை இருந்தது. அதில் ஒரு முறை பேட்டை சுழற்றினாலும் அவர் தன்னுடைய கீழ் சுழற்றலை அட்ஜஸ்ட் செய்தார்”
இதையும் படிங்க: பாக் பவுலர்கள் குறுக்கு வழியில் பெர்சனல் அட்டாக் பண்ணாங்க.. அதான் பேசி வெச்சு அடிச்சோம்.. அபிஷேக் பேட்டி
“ஒருவர் கீழ் சுழற்றலைப் பயன்படுத்தி விளையாடினால் பேட்டிங் பார்ப்பதற்கு எளிதாக தோன்றும். இது அபிஷேக் ஷர்மாவின் வரவு என்று நான் சொல்ல மாட்டேன். மாறாக அவருடைய மிகப்பெரிய வருங்காலத்திற்கான துவக்கம் என்று சொல்வேன். அவர் கிரிக்கெட்டின் உலகத்தில் அசத்தப்போகிறார் என்பதை எழுதிக் கொள்ளுங்கள். யுவ்ராஜ் போல மிகச்சிறந்த வெள்ளைப்பந்து கிரிக்கெட்டராக வரும் திறமை அவரிடம் இருக்கிறது. அபாரமான திறமையை கொண்டுள்ள அவர் யுவ்ராஜின் மரபை முன்னோக்கி எடுத்துச் செல்வார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.



