
உலகம் முழுவதிலும் 2025 ஆங்கில வருடம் நிறைவுக்கு வர உள்ளது. அதனால் 2026 புத்தாண்டை வரவேற்க மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி ஆடவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாதனை படைத்தது. அதே போல மகளிர் கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று இந்தியா புதிய சரித்திரம் படைத்தது.
இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியும் சாதனை படைத்தார். உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வந்த அவருக்கு கடந்த வருடம் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் கிட்டத்தட்ட வீரேந்திர சேவாக் போல ஆரம்பத்திலேயே எதிரணியை அடித்து நொறுக்கும் அவர் இந்தியாவின் வெற்றிகளுக்கு அடித்தளமிட்டு வருகிறார்.
குறிப்பாக 2025 ஆசியக் கோப்பையில் அதிரடியாக விளையாடி அதிக ரன்கள் குவித்த அபிஷேக் இந்தியா 8வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். மேலும் டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் (2025) வருடத்தில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் சர்வதேச 2025 டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா இந்தியாவின் சிறந்த வீரராக விளையாடியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
எனவே அடுத்த வருடம் அவருக்கு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது அபிஷேக் ஷர்மாவின் வருகை மட்டுமின்றி, இந்தியாவின் அடுத்த தலைமுறைக்கு துருப்புச்சீட்டு வீரரின் வருகையாகவும் அமைந்தது”
“ஒருவேளை 2025ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் அது அபிஷேக் சர்மாவாக இருப்பார். அந்தளவுக்கு அவர் நன்றாக பேட்டிங் செய்தார். குறிப்பாக இந்தியாவுக்காக பவர்பிளே பேட்டிங்கை மறுகற்பனை செய்யும் அளவுக்கு அவர் அசத்தலாக விளையாடினார்”
இதையும் படிங்க: இதை தெளிவா சொல்லாததே.. 2024இல் விளையாடிய பண்ட் 2026 டி20 உ.கோ மிஸ்ஸாக காரணம்.. தீப்தாஸ் குப்தா
“எனவே அவருடைய ஆட்டத்தை நான் ஒருநாள் கிரிக்கெட்டிலும் பார்க்க விரும்புகிறேன். சொல்லப்போனால் இம்முறை அவர் 2025ஆம் ஆண்டிற்கான சிறந்த ஐசிசி அணியில் ஒருவராக இருப்பார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். தற்போது ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா விளையாடி வருகிறார். எனவே ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பின் அபிஷேக் சர்மாவுக்கு ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பலாம்.