ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் தொடர்ச்சியாக 150 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடிக்கத் தடுமாறினார். இருப்பினும் அவரை வருங்கால கேப்டனாக வளர்க்க விரும்பும் தேர்வுக்குழு இப்போதே துணை கேப்டனாக அறிவித்துள்ளது.
அதற்காக ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிரடியாக விளையாடும் திறமையைக் கொண்டுள்ளார். 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் 2025 சீசனில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனலுக்கு அழைத்து சென்றார்.
சுயநலமா இருக்கனும்:
இந்நிலையில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் போன்றவர்கள் இனிமேலேவாது தங்களுடைய இடத்திற்காக பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் விளையாட வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் அணிக்காக சுயநலமின்றி அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை கொண்ட அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு.
“கில் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளதால் ஜெய்ஸ்வால் தற்போது அபிஷேக் இடத்திற்கு போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அல்லது அவர் ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும். டி20 கிரிக்கெட்டில் 36 சராசரியையும் 165 ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டுள்ள ஜெய்ஸ்வால் போன்ற வீரரைக் கண்டறிவது கடினம். சில நேரங்களில் அவர் தமக்காக விளையாடுவதில்லை, ஆனால் நிறைய பேட்ஸ்மேன்கள் தங்களுக்காக விளையாடுவதை நான் பார்த்துள்ளேன்”
அஸ்வின் ஆதங்கம்:
“ஸ்ரேயாஸ் ஐயரும் அதே போன்றவர். அவர்கள் இருவருமே தங்களுடைய பேட்டிங் சராசரிக்காக குறைவாகவும் ஸ்ட்ரைக் ரேட்டுக்காக அதிகமாகவும் விளையாடக் கூடியவர்கள். பந்து தங்களுடைய இடத்தில் இருந்தால் அவர்கள் அடித்து நொறுக்க முயற்சிப்பார்கள். அது போன்ற வீரர்களைக் கண்டறிய இந்தியாவுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. இப்போது எங்களுடைய இடம் பறிபோய் விட்டதால் அடுத்த முறை ரிஸ்க் எடுக்க மாட்டோம், முதலில் எங்களுக்காக விளையாடுகிறோம் என்று ஜெயஸ்வால், ஸ்ரேயாஸ் சொல்லலாம்”
இதையும் படிங்க: அக்சர் படேலுக்கு அவங்க விளக்கம் கொடுத்தே ஆகனும்.. என்னங்க இதெல்லாம் – முகமது கைப் பதிவு
“ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவ்வாறு விளையாடுவது துரதிஷ்டவசமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் தமக்குக் கிடைத்த வாய்ப்பை 2 கைகளாலும் பிடித்துக் கொண்டார். அவர் இதுவரை விளையாடிய அனைத்து ஃபார்மெட்டிலும் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காததால் அவர் மீண்டும் எப்படி வாய்ப்பப் பெறலாம் என்பது குறித்து வரைபலைகைக்கு சென்று பார்க்க வேண்டும். வருங்காலத்திற்காக அவரை வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.



