
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஏனெனில் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அவர் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதே போல ஐபிஎல் தொடரிலும் அவருடைய தலைமையில் சென்னை 5 கோப்பைகளை வென்றுள்ளது.
அத்துடன் 2 சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை வென்றுள்ள தோனி மிகவும் வெற்றிகரமான கேப்டனாக போற்றப்படுகிறார். பொதுவாக மற்ற கேப்டன்களை போல் அல்லாமல் களத்தில் வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய தோனி தைரியமான முடிவுகளை எடுப்பதில் வல்லவர். ஆனால் தன்னுடைய வீரர்கள் மீதும் அணியின் மீதும் நம்பிக்கை வைப்பதில் அவரைப் போன்ற ஒரு கேப்டன் இருக்க முடியாது என்றே சொல்லலாம்.
அஸ்வின் வியப்பு:
ஏனெனில் சில தோல்விகளை சந்தித்தாலும் அதற்காக தோனி தம்முடைய பிளேயிங் லெவனில் மாற்றங்களை செய்யவே மாட்டார். சொல்லப்போனால் 2023 ஐபிஎல் தொடரில் துஷார் தேஷ்பாண்டே ரன்களை வாரி வழங்கி சில தோல்விகளுக்கு காரணமாக அமைந்தார். ஆனால் அவருக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்த தோனி அவரை வைத்தே 2023 ஐபிஎல் கோப்பையை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்தார்.
இந்நிலையில் 15 வருடத்துக்கு முன்பாக தெரிவித்த ஆலோசனையை மீண்டும் தோனி தம்மிடம் தெரிவித்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் வியப்புடன் கூறியுள்ளார். அந்த வகையில் ஒரே விஷயத்தை பின்பற்றி தோனி வெற்றிகரமாக செயல்படுவது ஆச்சரியமளிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “யாருக்காகவும் உங்களை மாற்றாமல் புதிய விஷயங்களை முயற்சிப்பது, வேடிக்கையாக இருப்பது தான் உங்களுடைய மிகப்பெரிய பலம் என்று தோனி எப்போதும் சொல்வார்”
“ஒருமுறை துபாயில் நடைபெற்ற டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்ததும் “நான் முன்னேற்றியுள்ள என்னுடைய பேக் ஸ்பின்னை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்” என்று தோனியிடம் கேட்டேன். அப்போது “அதுவே உங்களின் பலம். நீங்கள் இப்படி வேடிக்கையாக இருப்பதை தொடர்ச்சியாக செய்து உங்களுடைய வேரியேசனில் வேலை செய்யுங்கள்” என்று தோனி என்னிடம் கூறினார்”
இதையும் படிங்க: 17 வருசத்துல இவ்ளோ தானா? உங்க திறமைக்கு இதெல்லாம் கம்மி.. விராட், ரோஹித் பற்றி மைக்கேல் வாகன்
“அப்போது இதைத்தானே இவர் 15 வருடங்களுக்கு முன்பாகவும் சொன்னார் என்று ஆச்சரியமடைந்தேன். இந்த மனிதர் எப்போதும் ஒரே விஷயத்தை தொடர்ந்து பார்க்கிறார். கிரிக்கெட்டை மட்டுமின்றி மனதளவிலான பலம் போன்ற அம்சங்களையும் அவர் இப்படியே பார்க்கிறார். சிஎஸ்கே அணியில் துஷார் தேஷ்பாண்டேவுடன் அவர் இதை செய்ததை நான் காண்கிறேன். எனவே அவர் அதைத் தொடர்ந்து செய்கிறார். குறிப்பாக குறிப்பிட்ட வேலைக்கு பொருந்தக்கூடிய வீரர்களை அவர் கண்டறிந்து தேர்ந்தெடுக்கிறார்” என்று கூறினார்.