ஆஸ்திரேலியாவுக்கு வரும் நவம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த ஆஸ்திரேலியாவில் 2018/19ஆம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் இந்தியா தொடரை வென்றது. அதை விட 2020/21ஆம் ஆண்டு முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டாகி இந்தியா மோசமான சாதனை படைத்தது.
அப்போது விராட் கோலி இல்லாமல் ரகானே தலைமையில் இளம் வீரர்களுடன் கொதித்தெழுந்த இந்தியா காபா கோட்டையை தகர்த்து 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. ஆனால் இம்முறை அதை விட பிரம்மாண்டமாக 1992க்குப்பின் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதற்கான அட்டவணையை ஆஸ்திரேலிய வாரியம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அஸ்வின் கருத்து:
ஆனால் அதில் வேகம் மற்றும் பவுன்ஸ் அதிகமாக இருக்கக்கூடிய பெர்த் மைதானத்தில் இத்தொடர் துவங்கும் என்று ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 2 தொடர்களில் வென்ற இந்தியாவை இம்முறை ஆரம்பத்திலேயே அடக்குவதற்காக ஆஸ்திரேலியா முதல் போட்டியை பெர்த் நகரில் நடத்த உள்ளது. இந்நிலையில் பெர்த் மைதானத்தில் முதல் போட்டி நடப்பது இந்தியாவுக்கு பெரிய சவால் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
ஆனால் சவாலை கடந்து இம்முறையும் இளம் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நீங்கள் தொடரை நன்றாக துவங்குவீர்கள். ஆனால் திரும்பி வருவதற்கான மன உறுதியை நீங்கள் தோண்டி எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியாவை பற்றி நான் சொல்லும் ஒரு விஷயம் என்னவெனில் இங்கிலாந்து போலவே அங்குள்ள மைதானங்கள் அனைத்தும் நிலையானது”
“சில நேரங்களில் மெல்போர்ன், சிட்னி சவாலாக இருந்தாலும் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். ஆஸ்திரேலியா போன்ற கடினமான சூழ்நிலையில் வரவேற்கும் வகையில் இந்திய கிரிக்கெட் சிறப்பாக செயல்படவில்லை. ஆஸ்திரேலியா அதைத்தான் மீண்டும் செய்ய முயல்கிறது. அவர்கள் எங்களை பெர்த்தில் முதல் போட்டியிலேயே நிறுத்துகிறார்கள். ஏனெனில் அங்கே வேகத்தில் மாற்றம் வித்தியாசமாக இருக்கும்”
இதையும் படிங்க: 36/3 என திணறிய ராஜஸ்தான்.. 4, 4, 6, 4, 6 மாஸ் ஃபினிஷிங் செய்த ரியன் பராக்.. கிண்டல்களை உடைத்து சாதனை
“இருப்பினும் நாங்கள் வெற்றிக்கான சிறந்த நோக்கத்துடன் தொடருக்கு செல்வோம். அதே சமயம் ஆஸ்திரேலியா அணியை ஒருபோதும் நாங்கள் இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுடைய அனுபவம் தான் அதற்கு காரணமாகும். அவர்களுடைய வேகப்பந்து வீச்சு கூட்டணி (கமின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட்) 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த அனுபவம் கொண்டது. இந்திய அணியிடம் அவ்வளவு அனுபவமில்லை. ஆனாலும் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு நம்மால் உயரே செல்ல முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.