ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சர்பராஸ் கானை வாங்கியது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. மும்பையைச் சேர்ந்த அவர் பல வருடங்களாக போராடி இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்தார். அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் அவர் 150 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஆனால் அதன் பின் காயமடைந்த அவருக்கு இந்திய அணி மறுவாய்ப்பு கொடுக்காமல் கழற்றி விட்டு வருகிறது. இருப்பினும் அதற்காக அசராத சர்பராஸ் கான் உள்ளூரில் முடிந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக 15 பந்துகளில் அரை சதமடித்த அவர் சயீத் முஸ்டாக் அலி டி20 கோப்பையில் மும்பைக்காக வேகமான அரை சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சென்னை அணியில் சர்பராஸ்:
அதனால் தம்மால் டி20 கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாட முடியும் என்று காண்பித்த அவரை ஏலத்தில் முதல் ரவுண்டில் எந்த அணியும் வாங்கவில்லை. இருப்பினும் கடைசி ரவுண்டில் அவரை சிஎஸ்கே அணி 70 லட்சத்துக்கு வாங்கியது. இந்நிலையில் ஸ்பின் பவுலர்களை நன்றாக எதிர்கொள்ளக்கூடிய சர்பராஸ் கான் சேப்பாக்கம் மைதானத்தில் எதிரணி ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்வீப் ஷாட்டுகளை அதிரடியாக விளையாடுவார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
அதற்காகவே சிஎஸ்கே அணி அவரை வாங்கியுள்ளதாகவும் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “சர்பராஸ் கான் ஏதேனும் ஒரு அணிக்காக விளையாட முடியுமேயானால் அது சென்னைக்காக இருக்கும். ஏனெனில் சென்னையில் இருக்கும் சூழ்நிலைகள் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கொயர் பகுதியில் தாக்கத்துடன் அடிக்கக்கூடிய ஒருவருக்கு சிறப்பாக இருக்கும்”
அஸ்வின் பாராட்டு:
“எனவே சர்பராஸ் களத்தில் தம்மை முழுமையாக வெளிப்படுத்தி தன்னுடைய திறமையான ஷாட்டுகளை சுதந்திரமாக அடிப்பதைப் பார்க்க விரும்புகிறேன். இந்த ஐபிஎல் தொடரில் அவரை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய முக்கியமான முடிவை சிஎஸ்கே எடுக்க வேண்டும். ஏனெனில் சிஎஸ்கே அணி தவற விட்ட பரிமாணத்தை அவரால் கொடுக்க முடியும். ஸ்ட்ரைக்கை மாற்றுவது, தவறான பந்துகளை வழக்கத்திற்கு மாறான ஷாட்டுகளால் தண்டிப்பது போன்ற அவருடைய ஆட்டத்தை தான் சிஎஸ்கே கடந்த வருடம் தவற விட்டது”
இதையும் படிங்க: 5 ஆவது டி20 போட்டிக்கு முன்னதாக சூரியகுமார் யாதவின் கேப்டன்சியை பாராட்டிய – இர்பான் பதான்
“எனவே சிஎஸ்கே அணியின் திட்டத்தில் அவர் இருப்பார் என்பதை எனக்குத் தெரியும். ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற அவருடைய தனித்துவமான பேட்டிங் திறனை சிஎஸ்கே அங்கீகரித்துள்ளது. அது இதற்கு முன் அவர்களிடம் இல்லை. சர்பராஸ் கானுக்காக நானும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் சிஎஸ்கே அணியில் தாக்கத்தை ஏற்படுத்துவதை நான் பார்க்க காத்திருக்கிறேன்” என்று கூறினார்.



