
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியது. இம்முறை 2026 டி20 உலகக் கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் வகையில் அத்தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது. அத்தொடரில் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே 8 முறை ஆசியக் கோப்பைகளை வென்றுள்ள இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்று நடப்புச் சாம்பியனாக திகழ்கிறது. இந்நிலையில் ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு சவாலைக் கொடுக்கும் எதிரணிகள் இல்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே தென்னாப்பிரிக்காவை இணைத்து இத்தொடரை ஆசிய – ஆஃப்ரோ கோப்பை என்ற பெயரில் நடத்தலாம் என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆசியக் கோப்பையை பொறுத்த வரை இந்தியா ஏ அணியே எதிரணிகளுக்கு சவாலைக் கொடுக்கும் என்று கூறும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர்கள் தென்னாப்பிரிக்காவை சேர்த்து ஆஃப்ரோ – ஆசியக் கோப்பை என்ற பெயரில் இத்தொடரை போட்டி மிகுந்ததாக மாற்றலாம். தற்போதைய நிலையைப் பொறுத்த வரை இந்தியா ஏ அணி போதுமானது”
“நாம் வங்கதேசத்தைப் பற்றி பேசுவது கூட கிடையாது. ஏனெனில் அவர்களைப் பற்றி பேச எதுவுமில்லை. இந்த ஆசிய அணிகள் எப்படி இந்தியாவுக்கு போட்டியை கொடுக்கப் போகின்றன? இம்முறை ஆசியக் கோப்பையை மற்ற அணிகள் வெல்ல வேண்டும் என்று சிலர் நம்புவார்கள். அப்போது தான் ஆசியக் கோப்பை போட்டி மிகுந்ததாக இருக்கும். குல்தீப் – வருண் ஆகியோரை எந்த எதிரணிகளும் சிறப்பாக எதிர்கொள்ளப் போவதில்லை”
“இத்தனைக்கும் நாம் மேட்ச் வின்னர்கள் நிறைந்துள்ள இந்தியாவின் பவர்ஃபுல்லான பேட்டிங்கை பற்றி பேசவில்லை. ஆசியக் கோப்பை 2026 டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் சிறந்த அளவுகோலாக இருக்காது. அச்சுறுத்தலைக் கொடுப்பார்கள் என்று சொல்லக்கூடிய ஆப்கானிஸ்தான் பவுலர்களுக்கு எதிராக இந்தியா 170+ ரன்கள் அடிப்பதாக வைத்துக் கொள்வோம்”
இதையும் படிங்க: பும்ராவை ஆடுனா நானும் பேட்டிங் செய்ய வரேன்.. 2024 டி20 உ.கோ இந்தியாவுக்கு மரியாதை இல்லையா? அஜய் ஜடேஜா
“ஆனால் இந்தியா பவுலர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அதை சேசிங் செய்யுமா? கிட்டத்தட்ட சாத்தியமில்லை. இந்தியாவை 155 ரன்களுக்குள் சுருட்டி பின்னர் சேசிங் செய்வதே அவர்களை தோற்கடிப்பதற்கான ஒரே வழியாகும். பொதுவாக டி20 போட்டிகள் திரில்லாக இருக்கும். ஆனால் இந்திய அணி ஆசியக் கோப்பையை ஒரு தலைப்பட்சமாக மாற்றும் திறனைக் கொண்டிருக்கிறது” என்று நிதர்சனமாக பேசினார்.