1000 ரன்ஸ் 100 விக்கெட்ஸ்.. இங்கிலாந்துடன் சேர்ந்து ஆஸியையும் திணறடிக்கும் அஸ்வின்.. தனித்துவமான இரட்டை சாதனை

Ashwin 100
- Advertisement -

ராஞ்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் நான்காவது டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றன. 2 – 1* (5) என்ற கணக்கில் இந்தியா இத்தொடரில் முன்னிலை வகிப்பதால் இப்போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் நாளில் 326/7 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறது.

அந்த அணிக்கு பென் டக்கெட் 11, ஜாக் கிராவ்லி 42, ஓலி போப் 0, ஜானி பேர்ஸ்டோ 38, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3, பென் ஃபோக்ஸ் 47 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் நட்சத்திர வீரர் ஜோ ரூட் கடந்த போட்டிகளைப் போல் அல்லாமல் இம்முறை நிதானமாக விளையாடி சதமடித்து 106* ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவருடன் களத்தில் ஓலி ராபின்சன் 13* ரன்களுடன் உள்ள நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3* விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

- Advertisement -

அஸ்வினின் இரட்டை சாதனை:
முன்னதாக இந்த போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை எடுத்த அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக 23 டெஸ்ட் போட்டிகளில் 100* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அந்த பட்டியலில் பிஎஸ் சந்திரசேகர் 23 போட்டிகளில் 95 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதே போல உலகின் மற்றொரு டாப் அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏற்கனவே அஸ்வின் 22 போட்டிகளில் 114 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அந்த வகையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுக்கு எதிராக அஸ்வின் தலா 100 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக தலா 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் கபில் தேவ் முதல் அனில் கும்ப்ளே வரை வேறு இந்திய பவுலர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக தலா 100 விக்கெட்டுகள் எடுத்ததில்லை. ஜாம்பவான் அனில் கும்ப்ளே மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 111 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இது மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு எதிராக ஏற்கனவே பேட்டிங்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் 1000 ரன்களையும் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: 57/3 என சரிந்த இங்கிலாந்து.. தனது வழியில் காப்பாற்றிய ரூட்.. இந்தியாவுக்கு எதிராக உலக சாதனை

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். சமீபத்தில் 500 விக்கெட்கள் எடுத்த முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னராக சாதனை படைத்த அஸ்வின் தற்போது இந்த போட்டியிலும் 2 மாபெரும் சாதனைகள் படைத்து தமிழகத்திற்கும் தமிழக ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement