ஐபிஎல் 2022 தொடரில் மே 18-ஆம் தேதி நடைபெற்ற 66-ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்து கொல்கத்தா பவுலர்களை சரமாரியாக அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் 210 ரன்கள் சேர்த்தனர். நவிமும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் முதல் ஓவரிலிருந்தே பவுண்டரிகளை பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்த இந்த ஜோடி பவர்பிளே ஓவர்கள் முடிந்தும் 10 கடந்தும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் திருப்தி அடையாமல் மிரட்டலாக பேட்டிங் செய்தது.
டீ காக் மாஸ்:
இதில் ஒரு கட்டத்தில் அரைசதம் கடந்ததும் கேஎல் ராகுல் மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் அரைசதம் கடந்த பின் விஸ்வரூபம் எடுத்த குயின்டன் டி காக் சதம் அடித்தும் ஓயாமல் கடைசி நேரத்தில் முரட்டுத்தனமாக ரன் மழை பொழிந்தார்.. இறுதிவரை இவர்களைப் பிரிக்க முடியாமல் கொல்கத்தா திணறிய நிலையில் 10 பவுண்டரி 10 சிக்சர்களை பறக்கவிட்ட குயின்டன் டி காக் 140* (70) ரன்களை விளாச அவருடன் கம்பெனி கொடுத்த ராகுல் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 68* (51) ரன்கள் எடுத்தார்.
இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 20 ஓவர்களும் விக்கெட் இழக்காமல் முழுமையாக பேட்டிங் செய்த முதல் ஜோடி என்ற சாதனை படைத்த அவர்கள் வரலாற்றில் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் வார்னர் – ஜானி பேர்ஸ்டோ ஜோடியின் ஆல் டைம் சாதனையையும் (185 ரன்கள், பெங்களூருவுக்கு எதிராக, 2019) உடைத்து புதிய சாதனையும் படைத்தனர்.
அதை தொடர்ந்து 211 என்ற மெகா இலக்கைத் துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 0 (4) அபிஜித் தோமர் 4 (8) என ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி தோல்வியை உறுதி செய்தனர்.இருப்பினும் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய நிதிஷ் ராணா 42 (22) ரன்களும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 50 (29) ரன்கள் குவித்து வெற்றிக்காகப் போராடி ஆட்டமிழந்தனர். அந்த நேரத்தில் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் தனது பங்கிற்கு அதிரடியாக 36 (24) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க சரவெடியாக பேட்டிங் செய்து காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரசல் 5 (11) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
போராடிய ரிங்கு:
அதனால் தோல்வி உறுதியானாலும் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த சுனில் நரேன் – ரிங்கு சிங் தோற்றாலும் பரவாயில்லை என்பது போல் அதிரடியான சிக்ஸர்களை பறக்க விட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதில் சுனில் நரேன் 7 பந்துகளில் 3 சிக்சருடன் 21* ரன்கள் எடுத்ததால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஸ்டாய்நிஸ் வீசிய அந்த ஓவரில் மிரட்டிய இந்திய வீரர் ரின்கு சிங் 4, 6, 6, 2 என 18 ரன்களை தெறிக்கவிட்டு வெற்றிக்காக போராடியபோது 5-வது பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சித்தார்.
ஆனால் அதை எவின் லெவிஸ் அற்புதமாக கேட்ச் பிடித்ததால் ரிங்கு சிங்கின் 40 (15) ரன்கள் அதிரடி போராட்டம் வீணானது. ஏனெனில் கடைசி பந்தில் களமிறங்கிய உமேஷ் யாதவ் கிளீன் போல்ட்டானதால் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்ற லக்னோ 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் குஜராத்தை தொடர்ந்து 2-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மறுபுறம் பந்துவீச்சில் சொதப்பி பேட்டிங்கில் போராடிய கொல்கத்தா 14 போட்டிகளில் 8 தோல்விகளை பெற்றதால் மும்பை, சென்னையை தொடர்ந்து 3-வது அணியாக அதிகாரபூர்வமாக வெளியேறியது. இப்போட்டியில் தனது குடும்பம் குழந்தை முன்னிலையில் அதிரடியான சதமடித்து 140* ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய குயின்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
What an unbelievable knock by Quinton De Kock – 140* from just 70 balls. His best ever IPL knock & one of the best of this season.
& What a proud moment for Quinton De Kock's family.. 🙌#Ipl2022 #LSGvsKKR #QunitonDeKock #GujaratTitans pic.twitter.com/yuVMcWr4du— ֆɦօʊʀʏǟ 屮 (@Shourya_46) May 18, 2022
ஆல் டைம் சாதனை:
1. அதனால் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தன்னுடன் விளையாடிய கேஎல் ராகுல் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. குயின்டன் டீ கான் : 140*
2. கேஎல் ராகுல் : 132*
3. ரிஷப் பண்ட் : 128*
4. சஞ்சு சாம்சன் : 119
2. மேலும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 50+ ஸ்கோர் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையையும் படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. குயின்டன் டீ காக் : 49*
2. கம்ரான் அக்மல் : 48
3. ஜோஸ் பட்லர் : 45
3. மேலும் ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த 3-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையும் பெற்றார். அந்தப் பட்டியல் இதோ:
1. கிறிஸ் கெயில் : 175*, 2013
2. ப்ரெண்டன் மெக்கல்லம் : 158* 2008
3. குயின்டன் டீ காக் : 140*, 2011
4. ஏபி டீ வில்லியர்ஸ் : 133*, 2015
இதையும் படிங்க : பார்ட்னர்ஷிப் போடுவதில் வரலாற்று சாதனை படைத்த ராகுல் – டீ காக் ! மொத்த சாதனை பட்டியல் இதோ
4. அத்துடன் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஆடம் கில்கிறிஸ்ட், கேஎல் ராகுல் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இந்த மூவருமே தலா 2 சதங்கள் அடித்துள்ளனர்.