
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்ல அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
முன்னதாக ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் மோசமாக விளையாடி தோற்றது. அந்தத் தோல்விக்கு பேட்டிங்கில் நிதிஷ் ரெட்டியை தவிர்த்து யாரும் அசத்தாதது முக்கிய காரணமானது. அதே போல பந்து வீச்சில் பும்ரா மிரட்டிய நிலையில் சிராஜ் விக்கெட்டுகளுக்கு நிகராக ரன்களை வழங்கினார்.
கடந்த போட்டியில் அறிமுகமான ஹர்ஷித் ராணா ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்கினார். எனவே 3வது போட்டியில் அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் போட்டியில் நன்றாக விளையாடி வெற்றிக்கு பங்காற்றிய ராணாவை ஒரு சுமாரான போட்டியை வைத்து நீக்குவது சரியல்ல என்று புஜாரா தெரிவித்துள்ளார்.
எனவே அவருக்கு இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கும் புஜாரா பேட்டிங்கை ஆழப்படுத்த அஸ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் விளையாட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அடுத்த போட்டியில் ஒரு மாற்றம் மட்டுமே நிகழும் என்று நான் கருதுகிறேன். பேட்டிங் நன்றாக இல்லாததால் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் வருவார்”
“ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக யாராவது விளையாட வேண்டுமா? என்னுடைய கருத்து இல்லை. ஏனெனில் முதல் போட்டியில் அவருக்கு நீங்கள் ஆதரவு கொடுத்தீர்கள். அவரும் அந்த வாய்ப்பில் அசத்தினார். அவர் நல்ல பவுலர். எனவே நீங்கள் ஒரு மோசமான போட்டியை வைத்து அவரை நீக்க முடியாது. என்னைப் பொறுத்த வரை அடுத்த போட்டியில் பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக அஸ்வினுக்கு பதில் சுந்தர் விளையாடும் ஒரு மாற்றம் மட்டுமே சரியானதாக இருக்கும்”என்று கூறினார்.
இதையும் படிங்க: கவாஸ்கர், சாஸ்திரி பேச்சை கேட்டு.. முட்டாள் ஆட்டுக் குட்டியாகிடாதீங்க.. ரோஹித்தை எச்சரித்த கணேஷ்
முன்னதாக முதல் போட்டியில் அனைத்து வீரர்களுமே நன்றாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். ஆனால் இரண்டாவது போட்டியில் வித்தியாசமான இளஞ்சிவப்பு நிற பந்தில் இந்திய அணியினர் அனைவருமே தடுமாறினார்கள். எனவே 3வது போட்டி மீண்டும் சிவப்பு நிற பந்தில் விளையாட உள்ளது. அதில் முதல் போட்டியில் அசத்திய சுந்தருடன் மீண்டும் இந்திய அணி விளையாடுவது வெற்றியை கொடுக்கலாம்.