பாலோ ஆன் பெற்று சரிந்த கவுண்டி அணியை இரட்டை சதமடித்து காப்பாற்றிய நட்சத்திர இந்திய வீரர் – அசத்தல் ஆட்டம்

Cheteshwar Pujara County
- Advertisement -

இந்தியாவை சேர்ந்த நட்சத்திர அனுபவ மூத்த வீரர் செடேஸ்வர் புஜாரா தனது அபார திறமையால் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுக்கு பின் அவரது இடத்தில் அவரைப் போலவே பொறுமையாகவும் நிதானமாகவும் பேட்டிங் செய்து எதிரணி பவுலர்களை களைப்படைய வைத்து ரன்களை குவித்து வெற்றிகளை தேடித் தரும் ஒரு அற்புதமான டெஸ்ட் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். அதன் காரணமாகவே ஒருநாள் மற்றும் டி20 போன்ற அணிகளில் வாய்ப்பு கிடைக்காத அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு கடந்த 10 வருடங்களாக இந்திய டெஸ்ட் பேட்டிங் துறையில் முக்கிய முதுகெலும்பு வீரராக செயல்பட்டு வந்தார்.

Cheteshwar Pujara

- Advertisement -

குறிப்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் 2 – 1 என்ற கணக்கில் விராட் கோலி தலைமையில் இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றினார். அப்படி டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என பெயரெடுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் அதன்பின் ரன்கள் அடிக்க முடியாமல் தவித்து வந்தார்.

கவுன்டியில் புஜாரா:
அதிலும் கடந்த ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடர் வரை 2 வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மில் திண்டாடி வந்த அவரை ஒரு வழியாக சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது. அதனால் அதன்பின் நடந்த ரஞ்சி கோப்பையை பயன்படுத்தி இந்திய அணிக்குள் நுழையலாம் என நினைத்த அவர் அந்த தொடரில் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறியதால் பின்னடைவை சந்தித்த நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலத்திலும் அவரை யாரும் வாங்கவில்லை.

pujara

அதன் காரணமாக வேறு வழியே தெரியாத அவர் இங்கிலாந்தில் நடைபெறும் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் அதிலும் ஒரு சோதனையாக விசா கிடைக்காத காரணத்தால் அந்த அணிக்காக முதல் போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. அதன்பின் தடைகளை கடந்து இங்கிலாந்து சென்ற அவர் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி துவங்கிய டெர்பிஷைர் அணிக்கு எதிரான 2-வது போட்டியில் முதல் முறையாக சசெக்ஸ் அணிக்கு விளையாடினார்.

- Advertisement -

பாலோ ஆன் பெற்ற சசெக்ஸ்:
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெர்பிஷைர் தனது முதல் இன்னிங்சில் அபாரமாக பேட்டிங் செய்து 505/8 என்ற இமாலய ஸ்கோரை எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக ஷான் மக்ஸூட் இரட்டை சதமடித்து 24 பவுண்டரிகள் உட்பட 239 ரன்கள் விளாசினார். அவருடன் வேட் மாட்ஸன் 8 பவுண்டரி உட்பட சதமடித்து 111 ரன்கள் குவித்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய சசக்ஸ் அணி டெர்பிஷைர் பவுலர்களின் அதிரடியான துல்லியம் நிறைந்த வேகப்பந்து வீச்சிற்கு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் சீரான இடைவெளிகளில் அடுத்தடுத்து அவுட்டானதால் வெறும் 174 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் டாம் ஹெய்ன்ஸ் 41 ரன்கள் எடுத்தார்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் 331 ரன்கள் பின்தங்கிய நிலையில் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கிய சசெக்ஸ் அணிக்கு அலி ஓர் 28, டாம் அஸ்லோப் 16 என டாப் ஆர்டர் வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். அந்த நிலைமையில் களமிறங்கிய செட்ஸ்வார் புஜரா முதல் இன்னிங்க்ஸ்சில் 6 ரன்களில் ஏமாற்றினாலும் இம்முறை கேப்டன் டாம் ஹெய்ன்ஸ் உடன் இணைந்து தனக்கே உரித்தான பாணியில் டெர்பிஷைர் பவுலர்களை நிதானமாகவும் பொறுமையாகவும் எதிர்கொண்டு கலங்கடித்தார்.

- Advertisement -

ஃபார்முக்கு திரும்பிய புஜாரா:
நேரம் செல்ல செல்ல அவுட்டே ஆகமாட்டேன் என்பது போல் அடம் பிடித்த இந்த ஜோடி டெர்பிஷைர் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு மலைபோல ரன்களை குவிக்க தொடங்கியது. தொடர்ந்து சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 351 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த போது 22 பவுண்டரிகள் உட்பட இரட்டை சதம் அடித்த கேப்டன் டாம் ஹெய்ன்ஸ் ஒருவழியாக 243 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுபுறம் நம்ம புஜாராவுக்கு சொல்லியா தரவேண்டும் என்பது போல் கடைசி வரை அவுட்டாகாமல் நங்கூரமாக நின்ற அவர் 23 பந்துகளில் இரட்டை சதம் அடித்து 201* ரன்கள் விளாசி போட்டியை டிரா செய்யும் வரை ஓயாமல் தனது சசெக்ஸ் அணியின் மானத்தை முதல் போட்டியிலேயே காப்பாற்றினார் என்று கூறலாம்.

இதையும் படிங்க : எவ்ளோதான் கலாய்ப்பது! விஜய் ஷங்கரை தூக்கிட்டு அவருக்கு வாய்ப்பு குடுங்க – ரசிகர்கள் கோரிக்கை

அவரின் நங்கூரமான ஆட்டத்தால் அந்த போட்டி இறுதியில் டிராவில் முடிந்தது. இதன் வாயிலாக இழந்த தனது பார்மை மீட்டெடுத்ததுடன் முதல் போட்டியிலேயே தனது கவுன்டி அணி பாலோ – ஆன் பெற்று தடுமாறிய போது 2-வது இன்னிங்சில் இரட்டை சதமடித்த புஜாராவை சமூக வலைதளங்களில் இந்திய அணி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதேபோல் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் அவரை பார்க்க முடியும்.

Advertisement