எவ்ளோதான் கலாய்ப்பது! விஜய் ஷங்கரை தூக்கிட்டு அவருக்கு வாய்ப்பு குடுங்க – ரசிகர்கள் கோரிக்கை

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த 2 போட்டிகளில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 29-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை மண்ணைகவ்வ செய்த குஜராத் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. நவி மும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 169/5 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு ராபின் உத்தப்பா 3 (10), மொய்ன் அலி 1 (3) என டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்ப அடுத்த ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு மற்றும் ருதுராஜ் ஆகியோர் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு தங்களது அணியை மீட்டெடுத்தனர்.

CSK vs GT shami uthappa

- Advertisement -

இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 46 (31) ரன்கள் எடுத்து ராயுடு ஆட்டமிழக்க மறுபுறம் முதல் 5 போட்டிகளில் சொதப்பி விமர்சனத்திற்கு உள்ளான ருத்ராஜ் கைக்வாட் இப்போட்டியில் பொறுப்புடன் பேட்டிங் செய்து 5 பவுண்டரி 5 சிக்சருடன் 73 (48) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியில் சிவம் துபே 19 (17) ரன்களும் ரவீந்திர ஜடேஜா 22* (12) ரன்களும் போராடி எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

தனி ஒருவன் மில்லர்:
அதை தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அடுத்த ஓவரிலேயே தமிழக வீரர் விஜய் சங்கரும் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். போதாகுறைக்கு ரித்திமான் சஹா 11 (18) அபினவ் மனோகர் 12 (12) என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 48/4 என தடுமாறிய குஜராத் அணியின் தோல்வி உறுதியென அனைவரும் நினைத்தனர். அந்த மோசமான நிலைமையில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் தனி ஒருவனை போல சென்னை பவுலர்களை புரட்டி எடுத்து சரமாரியாக ரன்களை விளாசினார்.

David Miller vs CSK

இடையில் ராகுல் டிவாடியா 6 (14) ரன்களில் அவுட்டானாலும் அவருக்கு உறுதுணையாக ரஷீத் கான் யாருமே எதிர்பாராத வண்ணம் 2 பவுண்டரி 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு முக்கியமான 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் அவுட்டாகாமல் அடம் பிடித்து சென்னை பவுலர்களை பந்தாடிய டேவிட் மில்லர் 8 பவுண்டரி 6 சிக்சருடன் 94* (51) ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் மாஸ் பினிஷிங் கொடுத்ததால் 19.5 ஓவர்களில் 170/7 ரன்களை எடுத்த குஜராத் அதிரடியான வெற்றியைப் பற்றி இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5-வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஜொலிக்கிறது.

- Advertisement -

சொதப்பிய சங்கர்:
சென்னை சார்பில் ப்ராவோ 3 விக்கெட்கள், தீக்சனா 2 விக்கெட்கள் எடுத்து சிறப்பாக பந்து வீசினாலும் 3.5 ஓவர்களில் 58 ரன்களை வாரி வழங்கிய கிறிஸ் ஜோர்டான் சென்னையின் வெற்றியை எதிரணிக்கு பரிசளித்தார். இந்த அதிரடியான வெற்றிக்கு 94* ரன்கள் குவித்த முக்கிய பங்காற்றிய டேவிட் மில்லர் ஆட்டநாயகன் விருதை வென்று சென்னையின் பிளே ஆஃப் கனவை உடைத்தார் என்றே கூறலாம். ஏனெனில் ஏற்கனவே தொடர் தோல்விகளால் தவித்து வந்த அந்த அணி இதோடு சேர்த்து பங்கேற்ற 6 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் திண்டாடுகிறது. இனிமேல் அடுத்த 8 போட்டிகளில் அந்த அணி தொடர்ந்து வெற்றி பெற்றால் கூட பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் குறைவாகும்.

அதைவிட நேற்றைய போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர் மீண்டும் சொதப்பியது சென்னை உட்பட அனைத்து ரசிகர்களையும் கோபமடைய வைத்தது. ஏனெனில் குஜராத் நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க அடுத்ததாக முக்கியமான 3-வது இடத்தில் களமிறங்கிய தமிழக வீரர் விஜய் சங்கர் பொறுப்பே இல்லாமல் சந்தித்த 2-வது பந்திலேயே அவுட்டாகி மேலும் அதிர்ச்சி அளித்தார். இத்துடன் இதுவரை அவர் பங்கேற்ற 4 போட்டிகளில் முறையே 4 (6), 13 (20), 2 (7), 0 (2) என டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி வருவது தமிழக ரசிகர்களையே கோபமடைய வைத்துள்ளது.

ரசிகர்கள் கோபம்:
ஏனெனில் முதல் போட்டியில் அவர் சொதப்பிய காரணத்தால் 2-வது போட்டியில் வாய்ப்பு பெற்ற மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக 35 (30) ரன்களை சேர்த்த போதிலும் காரணமே இல்லாமல் இவரை நம்பி குஜராத் அணி நிர்வாகம் அவரை கழற்றி விட்டது. ஆனால் அதை உணராமல் தொடர்ந்து சொதப்பி வரும் இவரை எத்தனை முறை கலாய்ப்பது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் கலாய்க்கின்றனர்.

இப்படி ஒரு மோசமான வீரர் 3-வது இடத்தில் விளையாடும் கொடுமையை பார்க்க வேண்டிய நாம் அதே இடத்தில் சென்னைக்காக சுரேஷ் ரெய்னா விளையாடுவதை பார்க்க முடியவில்லையே என்றும் ரசிகர்கள் அலுத்துக் கொள்கின்றனர். மேலும் அடுத்த போட்டியிலாவது இவருக்கு பதில் ஷாய் சுதர்சன் அல்லது வேறு ஏதாவது இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

Advertisement