2 வருடத்திற்கு பின் சதமடித்த புஜாரா! அசாருதீன், சங்கக்காரா சாதனை சமன் – மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு உறுதியா

Pujara County
- Advertisement -

இந்தியாவை சேர்ந்த நட்சத்திர அனுபவ கிரிக்கெட் வீரர் செடேஸ்வர் புஜாரா தனது அபார திறமையால் கடந்த 10 வருடங்களாக இந்திய டெஸ்ட் பேட்டிங் துறையின் முக்கிய முதுகெலும்பு வீரராக வலம் வந்தார். முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் போல பொறுமையாக நிதானத்துடன் பேட்டிங் செய்து ரன்களை குவித்து வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக கருதப்பட்ட அவர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையை முதல் முறையாக விராட் கோலி தலைமையிலான இந்தியா வென்று சரித்திர சாதனை படைக்க 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து முக்கிய பங்காற்றினார்.

pujara

- Advertisement -

அந்த அளவுக்கு தரமான அவர் அதன்பின் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மில் திண்டாடினார். குறிப்பாக கடைசியாக ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் படுமோசமாக செயல்பட்ட அவர் 2 வருடங்களாக சதம் அடிக்காத காரணத்தால் கடுப்பான இந்திய அணி நிர்வாகம் சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின்போது அவரை கழற்றி விட்டது.

கவுன்டியில் புஜாரா:
அதன்பின் நடந்த ரஞ்சி கோப்பையில் சொதப்பிய அவரை ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் எந்த அணியும் வாங்காத காரணத்தால் இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவதற்கு வேறு வழியே இல்லாமல் பரிதவித்த அவர் இங்கிலாந்தில் நடைபெறும் பிரபல கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார்.

pujara 1

அதை தொடர்ந்து ஏப்ரல் 14-இல் துவங்கிய டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்றார். அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெர்பிஷைர் அபாரமாக பேட்டிங் செய்து தனது முதல் இன்னிங்சில் 505/8 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக ஷான் மக்ஸூட் இரட்டை சதமடித்து 24 பவுண்டரிகள் உட்பட 239 ரன்களும் வேட் மாட்ஸன் 8 பவுண்டரி உட்பட சதமடித்த 111 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

நங்கூரம் புஜாரா:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய சசெக்ஸ் டெர்பிஷைர் பவுலர்களின் அதிரடியான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 174 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது. அதில் புஜாரா 6 ரன்கள் எடுக்க அதிகபட்சமாக கேப்டன் டாம் ஹெய்ன்ஸ் 41 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 331 ரன்கள் பின்தங்கிய நிலையில் மீண்டும் 2-வது இன்னிங்சை தொடங்கிய சசெக்ஸ் அணிக்கு அலெஸ்டர் ஓர் 28, டாம் அஷ்லோப் 16 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து களமிறங்கிய புஜாரா கேப்டன் டாம் ஹெய்ன்ஸ் உடன் ஜோடி சேர்ந்து நங்கூரமாக நின்று விக்கெட்டை விடாமல் ரன்களை சேர்க்கத் தொடங்கினார்.

Cheteshwar Pujara County

அவருடன் டாம் ஹெய்ன்ஸ் அசத்தலாக பேட்டிங் செய்ததால் 3-வது விக்கெட்டுக்கு 351 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி தங்களது அணியை சரிவில் இருந்து மீட்டது. அப்போது கேப்டன் டாம் ஹெய்ன்ஸ் இரட்டை சதமடித்து 22 பவுண்டரிகள் உட்பட 243 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் அவுட்டாகாமல் அடம்பிடித்த புஜாரா தொடர்ந்து எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து 23 பவுண்டரி உட்பட இரட்டை சதமடித்து 201* ரன்கள் குவித்து கடைசி வரை நின்ற காரணத்தால் அந்த போட்டி டிராவில் முடிந்தது.

- Advertisement -

புஜாரா சாதனை:
1. இந்த அபார சதத்தால் முதல்தர டெஸ்ட் போட்டிகளில் 52 இன்னிங்ஸ்களுக்குப் பின் 2 வருடங்கள் கழித்து முதல் முறையாக சதமடித்த புஜாரா ஒரு வழியாக பழைய பார்முக்கு திரும்பியுள்ளார். கடைசியாக கடந்த 2020-ஆம் ஆண்டு கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பையில் 248 ரன்களை அடித்த அவர் அதன்பின் 52 இன்னிங்ஸ்களில் 1518 ரன்களை 30.36 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்து திண்டாடி வந்த நிலையில் தற்போது மீண்டும் இரட்டை சதமடித்து பார்முக்கு திரும்பி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

2. இதனால் இந்திய ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ள அவர் புகழ்பெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் இரட்டை சதமடித்த 2-வது இந்திய பேட்ஸ்மேன் என்ற அபார சாதனையை முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு பின் படைத்துள்ளார். அதிலும் 21-ஆம் ஆண்டு நூற்றாண்டில் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. முஹம்மது அசாருதீன் (டெர்பிஷைர் அணிக்காக) : 212, 1991.
2. முஹம்மது அசாருதீன் (டெர்பிஷைர் அணிக்காக) : 205, 1994.
3. செடேஸ்வர் புஜாரா (சசெக்ஸ் அணிக்காக) : 201*, 2022

- Advertisement -

3. இத்துடன் சேர்த்து 14 இரட்டை சதங்கள் அடித்துள்ள புஜாரா முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக இரட்டை சதங்களை அடித்த ஆசிய பேட்ஸ்மேன் என்ற இலங்கையின் ஜாம்பவான் குமார் சங்ககாராவின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

4. மேலும் சசெக்ஸ் அணிக்காக இப்போட்டியில் முதல் முறையாக களமிறங்கி 201* ரன்கள் விளாசிய அவர் கவுண்டி சாம்பியன்ஷிப் வரலாற்றில் சசெக்ஸ் அணிக்காக அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மென் என்ற புதிய சாதனை படைத்துள்ளார். இதற்குமுன் 2009இல் ஜோ கெட்டிங் 152 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

இப்படி அடுத்தடுத்த சாதனைகளுடன் பார்முக்கு திரும்பியுள்ள புஜாரா இந்திய அணிக்காக விளையாட மீண்டும் தேர்வு குழு கதவை தட்டியுள்ளார். ஏனெனில் அடுத்ததாக வரும் ஜூலை மாதம் இதே இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்தியா கடந்த வருடம் பாதியில் விட்டு வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நடைபெற உள்ளது.

இதையும் படிங்க : அந்த விடயத்தை மனதில் வைத்துக்கொண்டே தான் சென்னையை புரட்டி எடுத்தேன் – மிரட்டிய கில்லர் மில்லர் பேச்சு

2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் அந்த தொடருக்கு முன்பாக எஞ்சிய கவுண்டி போட்டிகளிலும் இதேபோல் புஜாரா செயல்பட்டால் நிச்சயம் அவருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement