
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. சமீபத்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவடைந்த நிலையில் ,புதன்கிழமை ஒருநாள் தொடருக்கான போட்டிகள் துவங்க உள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற 5-வது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித சர்மா காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். இந்த போட்டியில் அவர் 41 பந்துகளில் 60 ரன் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காயம் அதிகமாக, தற்போது அவரால் அடுத்த இரண்டு தொடர்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவருக்கு பதிலாக மாற்று வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக மாயங்க் அகர்வாலும், ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக பிரிதிவி ஷாவும் களமிறங்கியுள்ளனர். மேலும் , உள்ளூர் தொடரில் சமீபகாலமாக அசத்தி வரும் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளில் அகர்வாலுடன் ப்ரித்வி ஷா விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அதேபோல ஒருநாள் போட்டிகளிலும் இந்த இருவரே துவக்க வீரர்களாக விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடி இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் தற்போதுதான் அறிமுகமாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.