டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் பிரிதிவி ஷா 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச அரங்கில் காலடி வைத்து அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், பிரையன் லாரா ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பாராட்டுகளை அள்ளினார். அதனால் குட்டி சேவாக் போல வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் குறுகிய காலத்திலேயே தனது இடத்தை தக்க வைக்க முடியாத அளவுக்கு ஸ்விங் பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறி முழுமையான ஃபிட்னஸ் கடைபிடிக்காமல் திணறியதால் கழற்றி விடப்பட்டார்.
அந்த வகையில் கடைசியாக கடந்த 2021 ஜூலை மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடியிருந்த அவர் அதன் பின் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடியும் தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் கடந்த ரஞ்சி கோப்பையில் முச்சதம் அடித்து ஒரு வழியாக ஃபார்முக்கு திரும்பிய அவர் உடல் எடையை குறைத்து சிறப்பாக செயல்பட்டதால் கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் தேர்வானார். ஆனால் அதில் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறாத அவர் அதை உறுதி செய்வதற்கு ஐபிஎல் 2023 தொடரில் அசத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினாலும் அப்படியே நேர்மாறாக சுமாராக செயல்பட்டார்.
அஸ்வின் மாதிரியே:
அதனால் அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் செப்டம்பரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் நிறைய இளம் வீரர்களை தேர்வு செய்துள்ள தேர்வுக்குழு அவரை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது. முன்னதாக ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த இந்திய அணியினர் தற்போது சீனியர்களாக மாறியதுடன் தங்களது இடத்தை பாதுகாப்பதற்காக ஒருவருக்கொருவர் உதவியும் செய்வதில்லை எதையும் பகிர்ந்து கொள்வதில்லை என நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தாம் விளையாடும் உள்ளூர் அணியிலும் கூட சக வீரர்கள் தன்னிடம் பேசினாலும் ஒருவருக்கொருவர் உதவுவதில்லை என்று பிரிதிவி ஷா ஆதங்கத்துடன் கூறியுள்ளார். அதனால் இப்போதெல்லாம் யாரிடமும் தமது மனதிற்குள் இருப்பதை பகிர்ந்து கொள்ளாமல் குறைவான நண்பர்களை வைத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இப்போதெல்லாம் அனைவரும் ஒருவருக்கொருவர் நன்றாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் மனதிற்குள் இருப்பதை யாரும் ஓப்பனாக சொல்வதில்லை. குறிப்பாக நான் யாரிடமும் எதைப் பற்றியும் பகிர்ந்து கொள்வதில்லை”
“அதனால் என்னுடைய சொந்த விஷயங்கள் என்றால் எனது தந்தையிடம் பகிர்ந்து கொள்வேன். மேலும் கிரிக்கெட் சம்பந்தமாக உதவி தேவைப்பட்டால் பயிற்சியாளர் பிரசாந்த் செட்டியிடம் செல்வேன். அதாவது இப்போதெல்லாம் நான் என்னுடைய எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை நிறுத்தி விட்டேன். அவை அனைத்தையும் எனக்குள்ளே வைத்திருக்கிறேன். முன்பெல்லாம் நிறையவற்றை நான் விளையாட்டாக சொல்வேன்”
“குறிப்பாக யாராவது என்னிடம் நன்றாக பேசினால் எனக்குள் இருக்கும் அனைத்தையும் சொல்லி விடுவேன். ஆனால் நாளடைவில் தான் நான் சொன்னவற்றை வைத்து அவர்கள் வேறு மாதிரியாக எனக்கு பின்னால் சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். இது ஒரு முறையல்ல நிறைய முறை நடந்துள்ளது. அதனால் தற்போது உலகம் எவ்வாறு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் செயல்பட முயற்சிக்கிறேன். பொதுவாக நாம் சிறந்த நண்பன் என்ற கருத்தை உருவாக்கியுள்ளோம்”
இதையும் படிங்க:தப்பு பண்ணிடாதீங்க, அவர் கண்டிப்பா 2023 உ.கோ அணியில் இருக்கனும் – அகர்கரிடம் 21 வயது இளம் வீரரை பரிந்துரைத்த கங்குலி
“அதனால் சிலரை சிறந்த நண்பன் என்று சொல்கிறோம். ஆனால் உண்மையாகவே இங்கு அனைவரும் நண்பர்களாக இருக்கின்றனர் யாரும் சிறந்த நண்பர்களாக இருப்பதில்லை. ஏனெனில் சிறந்த நண்பர்கள் என்றால் நீங்கள் அனைத்தையும் பகிர வேண்டும். ஆனால் நான் சிறந்த நண்பராக கருதுபவரிடம் என்னுடைய ஏடிஎம் ரகசிய எண்ணை தெரிவிக்க மாட்டேன் அல்லவா? அந்த வகையில் நீங்கள் உங்களுடைய சிறந்த நண்பர்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வதில்லை” என்று கூறினார்.