ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரிதிவி ஷா சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்தார். அதனால் அவர் பிரைன் லாரா, சச்சின், சேவாக் கலந்த கலவை என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பாராட்டுகளையும் பெற்றார்.
ஆனால் நாளடைவில் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு சுமாராக செயல்பட்ட அவர் தரமான ஸ்விங் பந்தில் கிளீன் போல்ட்டாவதை வழக்கமாக வைத்துள்ளார். அதனால் 2022 ஜூன் மாதத்துடன் இந்திய அணியில் இருந்து மொத்தமாக கழற்றி விடப்பட்ட அவர் உள்ளூர் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அந்த சூழ்நிலையில் உடல் எடையை குறைத்து ஓரளவு ஃபிட்டானதால் இந்த ஐபிஎல் தொடரில் பிரிதிவி ஷா என்று அசத்துவார் எதிர்பார்க்கப்பட்டது.
கழற்றி விடப்படும் ஷா:
ஆனால் ஆரம்பத்திலேயே வாய்ப்பு பெற்ற அவர் மொத்தம் 8 போட்டிகளில் விளையாடி வெறும் 198 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் அவரை கழற்றி விட்ட டெல்லி நிர்வாகம் அபிஷேக் போரேல் மற்றும் ஜேக் பிரேசர்-மெக்குர்க் ஆகியோருக்கு ஓப்பனிங்கில் களமிறங்குவதற்கான வாய்ப்பை கொடுத்தது. அதைப் பயன்படுத்திய அந்த இளம் வீரர்கள் டெல்லி அணியின் சமீபத்திய வெற்றிகளில் முக்கிய பங்காற்றினர்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தக்க வைக்கப்பட்ட பிரிதிவி ஷா தொடர்ந்து சிறப்பாக செயல்படவில்லை என்று டெல்லி அணியின் துணைப் பயிற்சியாளர் ப்ரவீன் ஆம்ரே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அடுத்த வருடம் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் அவரை டெல்லி அணி மீண்டும் தக்க வைக்காது என்று மறைமுகமாக தெரிவிக்கும் ஆம்ரே இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“பிரிதிவி ஷா எங்களுடைய தக்க வைக்கப்பட்ட வீரர். ஆனால் கடந்த நான்கைந்து போட்டிகளில் அவர் பெஞ்சில் அமர்ந்திருந்தார். நீங்கள் நல்ல ஃபார்மில் இல்லை என்றால் தொடர்ந்து உங்களுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் வெற்றி பெற வேண்டிய அழுத்தமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். அதனாலேயே அவரை நாங்கள் அணியிலிருந்து நீக்கினோம்”
இதையும் படிங்க: எங்களோட விருப்பம் வேற.. ஆனா தோனி அதுல கொஞ்சம் ட்ராமா பண்ணுவாரு.. மைக் ஹசி பேட்டி
“சொல்லப்போனால் அவரைத் தேர்வு செய்யாமல் நாங்கள் வெற்றிகளை பெற்றுள்ளோம். அவருக்கு பதிலாக வாய்ப்பை பெற்ற அபிஷேக் போன்ற வீரர்கள் அதை இரு கைகளாலும் இறுக்கமாக பிடித்துக் கொண்டுள்ளனர்” என்று கூறினார். இந்த நிலையில் அடுத்த வருடம் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் அனைத்து அணிகளும் 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். அதன் காரணமாக பிரிதிவி ஷா டெல்லி அணியிலிருந்து கழற்றி விடப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.