
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்டுள்ள அவர் சூரியகுமார் யாதவை புதிய டி20 கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். ஏனெனில் 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்டிக் பாண்டியாவை இதே அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தான் இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக வளர்க்க முடிவெடுத்தது.
அதனாலேயே 2022க்குப்பின் ரோகித் சர்மா ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பையிலும் துணை கேப்டனாக விளையாடிய பாண்டியா வெற்றியில் முக்கிய பங்காற்றினார். ஆனால் திடீரென புதிய பயிற்சியாளராக வந்த கம்பீர் சுமாரான ஃபிட்னஸ் காரணமாக பாண்டியா அனைத்து தொடர்களிலும் விளையாடுவதில்லை என்று கருதுகிறார்.
உண்மையான காரணம்:
எனவே பாண்டியாவை கழற்றி விட்டுள்ள அவர் நிலையாக விளையாடக்கூடிய சூரியகுமாரை 2024 டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். இந்நிலையில் 2014ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா அணிக்காக கேப்டனாக வென்ற கௌதம் கம்பீர் தலைமையில் சூரியகுமார் துணை கேப்டனாக செயல்பட்டதாக முன்னாள் வீரர் பிரக்கியான் ஒஜா கூறியுள்ளார்.
அதுவே தற்போது சூரியகுமாரை அவர் புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக இருப்பதாகவும் ஓஜா தெரிவித்துள்ளார். இது பற்றி ஒன்இந்தியா இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2026 டி20 உலகக் கோப்பைக்கு முதிர்ச்சி மற்றும் அனுபவம் கொண்ட ஒரு கேப்டனை தேர்வாளர்கள் விரும்புகின்றனர். அது போன்ற நிலையில் சூரியகுமாரை விட ஹர்திக் பாண்டியா சிறந்தவராக உள்ளார்”
“அதனாலயே உலகக் கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட அவர் முழுநேர கேப்டனாக வருவார் என்று நாம் எதிர்பார்த்தோம். இருப்பினும் ஃபிட்னஸ் விஷயத்தில் அவர் சில சவால்களை சந்தித்து வருகிறார். அதன் காரணமாக சூர்யகுமாரை தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது சரியான தேர்வு என்று நான் கருதுகிறேன். மிகவும் புத்திசாலியான அவர் கௌதம் கம்பீருடன் சிறந்த நட்புறவு கொண்டுள்ளார்”
இதையும் படிங்க: திலக் வர்மாவை விரும்பிய கம்பீர்.. கடைசியில் சொதப்பலான ரியான் பராக் இலங்கை தொடரில் தேர்வானது எப்படி?
“உங்களுக்கு நினைவிருந்தால் கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியை வழிநடத்திய போது சூர்யா தான் துணை கேப்டனாக செயல்பட்டார். அதனால் புரிதலும் நம்பிக்கையும் அவர்களிடம் இருக்கிறது. மறுபுறம் ஃபிட்னஸ் காரணமாக ஹர்திக் பாண்டியா தடுமாறுவார் என்று தேர்வுக் குழுவினர் நினைக்கின்றனர். எனவே அவருக்கு அடுத்தபடியாக சிறந்த நபரான சூரியகுமாரை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று கூறினார்.