அம்பயரின் புண்ணியத்தால் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய கொல்கத்தா – 19 ஆவது ஓவரில் நடந்தது என்ன?

RR vs KKR
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மே 2-ஆம் தேதி நடைபெற்ற 47-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் சந்தித்தன. புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தேவ்தூத் படிக்கல் 2 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக ரன்கள் குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் 3 சதங்கள் அடித்து நல்ல பார்மில் இருக்கும் மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அவருக்கு கை கொடுக்காமல் 3 பவுண்டரியுடன் 22 (25) ரன்களில் மெதுவாக பேட்டிங் செய்து அவுட்டாகி ஏமாற்றினார்.

- Advertisement -

அந்த நிலைமையில் கருண் நாயர் 13 (13) ரன்களில் கொல்கத்தாவின் அபார பந்து வீச்சில் அவுட்டான நிலையில் அடுத்துவந்த ரியன் பராக் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 19 (12) ரன்கள் எடுத்தாலும் 17-வது ஓவரில் அவுட்டானார். ஆனால் அடுத்த பந்திலேயே சரிவை தாங்கிப் பிடிக்கும் வகையில் மறுபுறம் தொடர்ந்து பொறுப்புடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் 7 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கடந்து 54 (49) ரன்களில் ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் போராடி 152:
அதனால் 115/5 என்று தடுமாறிய ராஜஸ்தான் 150 ரன்களை தாண்டுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நல்லவேளையாக சிம்ரோன் ஹெட்மையர் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 27* (13) ரன்கள் எடுத்து காப்பாற்றியதால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 152 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக டிம் சௌதி 2 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 153 என்ற சுலபமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்களாக ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் உடன் தமிழக வீரர் பாபர் இந்திரஜித் முதல் முறையாக களமிறங்கினார்.

Nitish Rana 2

இருப்பினும் இந்த ஜோடியில் முதலில் ஆரோன் பின்ச் 4 (7) ரன்களில் அவுட்டாக அவரின் பின்னாடியே பாபா இந்திரஜித் 15 (16) ரன்களில் அவுட்டாகி தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 32/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய கொல்கத்தாவை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் நித்திஷ் ராணா ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3-வது விக்கெட்டுக்கு பொன்னான 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 34 (32) ரன்கள் எடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

கொல்கத்தா போராடி வெற்றி:
இருப்பினும் மறுபுறம் நிதிஷ் ராணா பொறுப்புடன் பேட்டிங் செய்து கொண்டிருக்க கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கிய இளம் ரிங்கு சிங் அவருக்கு கை கொடுக்கும் வகையில் அதிரடியாக பேட்டிங் செய்தார். கடைசி நேரத்தில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் நிதிஷ் ராணா 48* (37) ரன்களும் ரிங்கு சிங் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 42* (23) ரன்களும் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 19.1 ஓவேரிலேயே 158/3 ரன்களை எடுத்த கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

முன்னதாக இந்த போட்டிக்கு முன் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை பெற்று திண்டாடி வந்த கொல்கத்தா இந்த வெற்றியால் 10 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்களை அடிக்காமல் கோட்டைவிட்ட ராஜஸ்தான் பங்கேற்ற 10 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்தாலும் புள்ளி பட்டியலில் தொடர்ந்து 3-வது இடத்தில் நீடிக்கிறது.

அம்பயர் மோசம்:
முன்னதாக இப்போட்டியின் கடைசி கட்ட பரபரப்பான நேரத்தில் 19-வது ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட போது அதை பிரஸித் கிருஷ்ணா வீசினார். அதில் முதல் 2 பந்துகளில் தலா 1 ரன் மட்டும் கொடுத்து அவர் 3-வது பந்தில் பவுண்டரி ஏதும் கொடுத்த விடக்கூடாது என்ற நோக்கத்தில் ஒய்ட் பந்தைப் போல வீச முயற்சித்து அதை அடையாளம் காட்டும் வெள்ளை கோட்டுக்கு மேலேயே கச்சிதமாக வீசினார். அதை எதிர்கொள்வதற்காக ரின்கு சிங் சற்று இடது புறமாக நகர்ந்து பந்தை அடிக்க முயற்சித்த போதிலும் ரன் எதுவும் எடுக்கவில்லை. ஆனால் அதை அம்பயர் ஒயிட் என அறிவித்தது ராஜஸ்தான் வீரர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

IPL Umpires

ஏனெனில் அடிப்படை விதி முறைப்படி ஒய்ட் வெள்ளைக்கோட்டு மீது பந்து சென்றால் ஒய்ட் கிடையாது என்பதுடன் பேட்ஸ்மேனும் சற்று நகர்ந்த காரணத்தால் கண்டிப்பாக அது நிச்சயமாக ஒய்ட் இல்லை என்பதே நிதர்சனம். அந்த நிலையில் 4 மற்றும் 6 ஆகிய பந்துகளில் அதேபோன்ற பந்தை மீண்டும் பிரசித் கிருஷ்ணா வீசிய போது மீண்டும் கருணை காட்டாத அம்பயர் ஒயிட் வழங்கியது ராஜஸ்தான் ரசிகர்களை கடுப்பேற்றியது. அதற்கிடையில் ரின்கு சிங் 1 பவுண்டரியும் நிதிஷ் ராணா 1 சிக்சரும் அடித்ததால் 19-வது ஓவரிலேயே போட்டியும் முடிந்தது. மொத்தத்தில் அந்த பரபரப்பான நேரத்தில் அம்பயரின் புண்ணியத்தால் கொல்கத்தா வெற்றி பெற்றதாக ராஜஸ்தான் ரசிகர்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

Advertisement