
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர்களை கொண்ட முன்னணி அணிகள் தடுமாறி வருகிறது என்றே கூறலாம். குறிப்பாக சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற அணிகள் பல நட்சத்திர வீரர்களை தங்களது அணிகளில் வைத்திருந்தாலும் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது. அந்த வகையில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியிலும் ஏகப்பட்ட நட்சத்திர வீரர்கள் இருந்தும் அவர்களது செயல்பாடு மிகவும் மோசமாகவே இருந்து வருகிறது. அதோடு ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த போட்டியில் நிச்சயமாக தோல்வி தான் என்ற நிலையில் டெல்லி அணி தொடர்ச்சியாக விளையாடி வருகிறது.
இந்த தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணியானது 5 வெற்றிகள் மற்றும் 6 தோல்விகளை சந்தித்துள்ளது. எனவே இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இருப்பதால் கடுமையான போராட்டத்தை டெல்லி அளிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளது.
அதே போன்று அந்த அணி இவ்வளவு பலமாக இருந்தாலும் தொடர்ச்சியாக தோல்விகளை சந்திப்பதற்கு கேப்டன் ரிஷப் பண்ட் தான் காரணம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் ஒவ்வொரு போட்டியில் தோல்வி அடையும் போதும் அடுத்த போட்டியில் சில மாற்றங்களை அவர் தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
இப்படி ஒரு கேப்டனாக அவர் பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக மாற்றங்கள் செய்யக்கூடாது என்றும் நிலையான ஒரு அணியை கொண்டே போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக ரிஷப் பண்ட் கேப்டன்சி தற்போது பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டனான பண்ட்டின் மீது உள்ள இந்த விமர்சனம் குறித்து அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனது கருத்தினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
எப்போதுமே ரிஷப் பண்ட் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் நான் ஆதரவு மட்டுமே தெரிவிப்பேன். ஏனெனில் டி20 கிரிக்கெட் என்பது மிகவும் அழுத்தமான ஒரு போட்டி. எந்த நேரத்தில் போட்டியின் நிலை மாறும் என்று யாருக்கும் தெரியாது. இது போன்ற அழுத்தமான சூழ்நிலைகளில் சில முடிவுகளை நாம் உடனடியாக எடுத்தாக வேண்டும். போதிய கால அவகாசம் இன்றி எடுக்கப்படும் முடிவுகள் சில நேரங்களில் தவறாகவும் முடியலாம்.
இதையும் படிங்க : குறைந்த இலக்காக இருந்தாலும் கெத்தாக சுருட்டி வெற்றி பெற்ற குஜராத் அணி – நடந்தது என்ன?
எனவே வெளியிலிருந்து விமர்சிப்பது நமக்கு எளிதான ஒன்று. ஆனால் மைதானத்திலிருந்து அந்த முடிவுகளை கேப்டனாக எடுப்பது மிகவும் கடினம் எனவே நான் ரிஷப் பண்ட்டை ஆதரிக்கிறேன் என்றும் டெல்லி அணியின் தோல்விக்கு அவர் காரணம் இல்லை என்றும் பாண்டிங் தெளிவாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.