கிரிக்கெட் வீரர்கள் நாட்டை விட பணத்தை பெரிதாக பார்க்கிறார்கள் – கருத்தை மறுக்கும் கங்குலியின் பதில் இதோ

Ganguly
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 முதல் மே 29 வரை 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. இந்த வருடம் கோப்பையை வெல்வதற்கு 10 அணிகள் போட்டியிட்டதால் இருமடங்கு போட்டி காணப்பட்டது. அதில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று அசத்தியது. அந்த நிலைமையில் அனல் பறக்கும் ஐபிஎல் போட்டிகளை மைதானத்திற்கு வந்து நேரடியாக பார்க்க முடியாத ரசிகர்களுக்கு அதை நேரலையாக ஒளிபரப்பு வந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிந்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து 2023 – 2027 கால கட்டத்திற்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் கடந்த சில தினங்களாக மும்பை நகரில் மின்னணு முறையில் நடைபெற்றது. அதன் முடிவில் இந்திய துணை கண்டத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி ஸ்டார் குழுமம் மீண்டும் 23,575 கோடிக்கு வாங்கியது. அதேபோல் டிஜிட்டல் எனப்படும் மொபைல் மற்றும் ஆன்லைன் ஒளிபரப்பு உரிமத்தை 20,500 கோடிக்கு வியாகாம்18 நிறுவனம் வாங்கியது. அதுபோக உலகின் இதர பகுதிகளுக்கான ஒளிபரப்பு உரிமம் என மொத்தமாக இந்த ஏலத்தின் வாயிலாக 48,390 கோடி என்ற பிரம்மாண்ட தொகையை பிசிசிஐ கல்லா கட்டியுள்ளது.

பணமாக கிரிக்கெட்:
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலத்திலும் கேஎல் ராகுல், இசான் கிசன் உட்பட நிறைய இந்திய வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் கோடிக்கணக்கில் இலட்சக் கணக்கிலும் ஏலம் போனார்கள். இதனால் ஐபிஎல் என்பது கிரிக்கெட்டை என்பதையும் தாண்டி முழுக்க முழுக்க கோடிகளை அள்ளும் வியாபாரமாக மாறியுள்ளது. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில் தாய் நாட்டுக்காக ஒரு வருடம் முழுவதும் விளையாடினாலும் 1 கோடி ரூபாய் கிடைப்பதில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் ஒருசில மாதங்கள் விளையாடுவதற்கு 5, 10, 15 என கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது.

Top 5 Exciting Young Talented Players to Watch Out in IPL 2022

அதனால் சமீப காலங்களில் நிறைய வீரர்கள் தங்களது தாய் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். அத்துடன் இந்த தொடரில் வெறும் 2 மாதங்கள் மிகச் சிறப்பாக விளையாடினால் போதும் வாழ்வில் முன்னேற்றமடைந்து விடலாம் என்ற எண்ணம் தற்போது இயற்கையாகவே இளம் வீரர்களின் மனதில் நஞ்சு விதையாக விழுந்து விட்டது. அதனால் அந்த காலத்தில் பணத்தை பற்றி கவலைப்படாமல் ரஞ்சி கோப்பையில் விளையாடி நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் தற்போது மாறிப்போய் ஐபிஎல் தொடரில் விளையாடி பணம் சம்பாதித்தால் போதும் என்ற எண்ணமாக இளைஞர்களின் மனதில் உருவாகிவிட்டது.

- Advertisement -

கங்குலி மறுப்பு:
இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பணத்திற்காக மட்டும் விளையாடுவதில்லை என்று முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இந்தக் கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் பணம் என்பது ஒரு வீரரின் செயல்பாட்டில் எந்த தொடர்பையும் கொண்டிருப்பதில்லை. சுனில் கவாஸ்கர், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோர் காலத்தை விட இப்போதுள்ள வீரர்கள் நிறைய பணம் சம்பாதிக்கின்றனர் என்றாலும் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பசியுடன் களத்தில் விளையாடுகின்றனர்”

Ganguly

“பணத்திற்காக மட்டும் வீரர்கள் விளையாடுகிறார்கள் என்று நான் கருதவில்லை. மாறாக தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்ற எண்ணத்திலேயே அனைத்து வீரர்களும் விளையாடுகிறார்கள். ஒவ்வொரு வீரரும் சர்வதேச அளவில் ஐசிசி உலக கோப்பை போன்ற தொடர்களை வெல்ல வேண்டும் என்றே நினைப்பார்கள்” என தெரிவித்தார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்:
தற்போது விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ள ஐபிஎல் வரும் காலங்களில் 74 போட்டியில் இருந்து 84, 94 போட்டிகளாக விரிவடைய உள்ளது. அதனால் சர்வதேச போட்டிகள் அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக நிறைய வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆனால் வருங்காலத்தில் விரிவடைந்தாலும் கூட சர்வதேச கிரிக்கெட்டை பாதிக்காத வகையில்தான் ஐபிஎல் நடைபெறும் என்று கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : 3 ஆண்டுகால ஏக்கம் மட்டுமில்ல என்னோட ஒவ்வொரு நாள் கனவும் இதுதான் – மனம்திறந்த தினேஷ் கார்த்திக்

“சர்வதேச இரு தரப்பு தொடர்கள் தொடர்ந்து நடைபெறும். ஐபிஎல் என்பது இந்திய தொடராகும். இரு தரப்பு தொடர்கள் உலகின் இதர நாடுகள் சம்பாதிக்க நடைபெறும் தொடர்களாகும். எனவே இதர நாட்டு வீரர்களுக்கு சர்வதேச தொடர்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் அடுத்த 2 வருடங்களில் ஐபிஎல் 74 போட்டிகளுடன் மாற்றமில்லாமல் நடைபெறும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டை கருத்தில் கொண்டு வருங்கால அட்டவணையை கவனத்துடன் தீர்மானிக்கப்படும்” என்று கூறினார்.

Advertisement