
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாக அறிவித்தார். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவர் ஐந்து முறை அந்த அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
கேப்டன் இல்ல அவர் ஒரு லீடர் :
இப்படி வெற்றிகரமான கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் ரோகித்துடனான தங்களது உறவு குறித்து பேசி வரும் வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளரான ஃபியூஷ் சாவ்லா கேப்டனாக ரோகித் சர்மா எப்படிப்பட்ட அணுகுமுறையை கொண்டவர் என்பது குறித்து தற்போது சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது திடீரென நள்ளிரவு 2:30 மணிக்கு எனக்கு மெசேஜ் அனுப்பி விழித்துக் கொண்டிருக்கிறாயா? என்று கேட்டார். நான் உடனே ஆம் என்று மெசேஜ் செய்தேன்.
உடனே நேரடியாக என்னுடைய அறைக்கு வந்த அவர் ஒரு காகிதத்தை என் கையில் கொடுத்து நாளைய போட்டியில் இதுதான் உன்னுடைய பந்துவீச்சு திட்டம். நீ டேவிட் வார்னருக்கு எதிராகவும் மற்ற வீரருக்கு எதிராகவும் எப்படி பந்துவீச வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். இது குறித்து நாம் ஆலோசிக்க வேண்டும் என்று கூறினார்.
இப்படி ஒரு அணியின் வெற்றிக்காக எந்நேரத்திலும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கக்கூடியவர் ரோகித் சர்மா. ரோகித் சர்மாவுடன் நான் நிறையவே கிரிக்கெட் ஆடி இருக்கிறேன். அதனால் அவருக்கும் எனக்குமான நட்பு என்பது ஆழமான ஒன்று. களத்திற்கு வெளியேறும் நாங்கள் பல நேரங்களில் கலந்துரையாடியுள்ளோம்.
இதையும் படிங்க : விராட் கோலிக்கு எதிரா அந்த சண்டை எனக்கு ரொம்ப புடிக்கும் – மிட்சல் ஸ்டார்க் ஓபன்டாக்
நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் கூட டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடினால் அடுத்தடுத்து வரும் வீரர்களுக்கு போட்டியின் சூழல் எளிதாக மாறும் என்பதால் அதிரடியான துவக்கத்தை அளித்தார். அவர் எப்போதுமே அணியின் வெற்றிக்காக மட்டுமே யோசிக்க கூடியவர் என பியூஷ் சாவ்லா கூறியது குறிப்பிடத்தக்கது.