
நட்சத்திர வீரர் விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படுகிறார். கடந்த 2008 முதல் விளையாடி வரும் அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற பேட்டிங் சராசரியில் எதிரணிகளை பந்தாடி வருகிறார். இதுவரை 26,000+ ரன்கள் மற்றும் 80 சதங்கள் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் அவர் விருது வென்றார். அதனால் 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய விராட் கோலி ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார். மேலும் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு அடையாள அகத்திக் கொள்கிறார்.
அந்த சூழ்நிலையில் பணம், அதிகாரம் வந்ததால் 16 வயதில் இருந்ததை விட தற்போதைய விராட் கோலி முழுமையாக மாறிவிட்டதாக முன்னாள் இந்திய வீரர் அமித் மிஸ்ரா சமீபத்தில் விமர்சித்திருந்தார். இருப்பினும் ரோஹித் சர்மா அப்போதும் இப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் இப்போதெல்லாம் விராட் கோலி தம்மிடம் பேசுவது கூட இல்லை என்று அமித் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விராட் கோலியை பற்றி தம்முடைய சீனியரான அமித் மிஸ்ரா தெரிவித்த கருத்துக்கள் உண்மையல்ல என்ற வகையில் இந்திய வீரர் பியூஸ் சாவ்லா அதிரடி கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எவ்வளவு கிரிக்கெட்டில் நான் விளையாடியுள்ளேன், எனக்கு எந்தளவுக்கு தெரியும் என்பதைத் தாண்டி விராட் கோலியுடன் எப்போதுமே எனக்கு நல்ல அனுபவம் இருந்தது”
“அவருடன் ஜூனியர் கிரிக்கெட்டில் ஒன்றாக விளையாடிய நான் பின்னர் ஐபிஎல் தொடரிலும் இந்தியாவுக்காகவும் விளையாடியுள்ளேன். ஒவ்வொருவருக்கும் தங்களது சொந்த மனநிலை இருக்கும். ஆனால் இன்று விராட் கோலியை சந்தித்தால் கூட அது நன்றாக இருக்கும். சொல்லப்போனால் கடந்த ஆசிய கோப்பையில் விராட் கோலி விளையாடிய போட்டியில் நான் வர்ணனையாளராக இருந்தேன்”
இதையும் படிங்க: இதெல்லாம் அவுட்டா? அம்பயரிடம் கொதித்த பாகிஸ்தான் கேப்டன்.. ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் விளாசல்
“அப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் பவுண்டரி அருகே இருந்த என்னிடம் வந்த விராட் கோலி “ஏதாவது சாப்பிட நன்றாக ஆர்டர் செய்யுங்கள்” என்று சொன்னார். அதன் பின் நாங்கள் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டோம். அந்த வகையில் 10 – 15 வருடங்களுக்கு முன்பு போலவே நாங்கள் இப்போதும் பேசிக் கொள்கிறோம். அமித் மிஸ்ரா தனது கேரியரில் விளையாடி பந்து வீசிய விதம் சிறப்பானது. சீனியரான அவரிடம் நானும் நிறைய கற்றுள்ளேன்” என்று கூறினார்.