ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தடுமாறியது. ஆனால் அதன் பின் கொதித்தெழுந்த மும்பை தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்று மிரட்டியுள்ளது. அதிலும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் லக்னோவை 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை அபார வெற்றி பெற்றது.
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையும் மும்பை இந்தியன்ஸ் படைத்தது. அதையும் சேர்த்து 10 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள மும்பை புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதனால் அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது என்றே சொல்லலாம்.
மிரட்டும் மும்பை:
அந்த அணிக்கு சரியான நேரத்தில் நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து சிறப்பாக விளையாடுவது பலமாக மாறியுள்ளது. அதே போல மூத்த வீரர் ரோஹித் சர்மா சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்து அசத்துகிறார். அது போக சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட மற்ற அனைத்து வீரர்களும் பாண்டியா தலைமையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளனர்.
அதன் காரணமாக அடுத்தடுத்து 5 வெற்றிகளைப் பெற்ற மும்பையை பார்த்து தற்போது மற்ற எதிரணிகள் பயப்படுவதாக முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவனில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். ஜஸ்ப்ரித் பும்ரா இம்பேக்ட் வீரராக வந்து போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்”
பயப்படும் எதிரணிகள்:
“அதனாலேயே இந்த அணி தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெறத் துவங்கியுள்ளது. அப்படி மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக அசத்தும் போது மற்ற அனைத்து அணிகளும் பயந்தாக வேண்டும். அவர்களுடைய அணியின் ஆரம்பம் முதல் 11 வரை அனைவரும் மேட்ச் வின்னர்களாக இருக்கின்றனர். ரோஹித் கடந்த 2 போட்டிகளாக என்ன செய்தார் என்பது நமக்குத் தெரியும். ரிக்கல்டன் லக்னோவுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார்”
இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியை சேப்பாக்கத்தில் வைத்து வீழ்த்திய சன் ரைசர்ஸ் படைக்கு மெகா சர்ப்ரைஸ் வழங்கிய – காவியா மாறன்
“ஜேக்ஸ் முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். அந்த வகையில் மும்பை அணிக்கு அனைத்தும் தாங்கள் விரும்பும் இடத்தில் விழத் துவங்கியுள்ளது. பாண்டியா செய்வதெல்லாம் இந்த அணிக்கு வெற்றிகரமாக நடக்கிறது. அது தான் இந்த அணியைப் பற்றியது. என்று கூறினார். இதைத் தொடர்ந்து மும்பை தங்களது அடுத்தப் போட்டியில் மே 1ஆம் தேதி ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.



