IND vs WI : இவர்தாங்க ரசிகர்களின் கேப்டன், ரோஹித் சர்மாவை கொண்டாடும் ரசிகர்கள் – காரணமும் வீடியோவும் உள்ளே

Rohit Sharma
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா வகித்த நிலையில் முக்கியமான 4-வது போட்டி ஆகஸ்ட் 7-ஆம் தேதியான நேற்று துவங்கியது. மோசமான வானிலை காரணமாக 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 191/5 ரன்கள் சேர்த்தது. ஆரம்பத்திலேயே அதிரடியை வெளிப்படுத்தி 53 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த தொடக்க ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 33 (16) ரன்களில் அவுட்டானார்.

அடுத்த ஓவரிலேயே 1 பவுண்டரி 2 சிக்சருடன் சூர்யகுமார் யாதவ் 24 (14) ரன்களில் ஆட்டமிழக்க மிடில் ஆர்டரில் தீபக் ஹூடா 21 (19) ரன்களும் பொறுப்புடன் விளையாடிய ரிஷப் பண்ட் 6 பவுண்டரியுடன் 44 (31) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அந்த சமயத்தில் தினேஷ் கார்த்திக் 6 (9) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அசத்திய சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 30* (23) ரன்களும் அக்ஷர் பட்டேல் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 20* (8) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

இந்தியா வெற்றி:
அதைத்தொடர்ந்து 192 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு பிரண்டன் கிங் 13 (8) கெய்ல் மேயர்ஸ் 14 (16) டேவோன் தாமஸ் 1 (14) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 24 (8) ரன்கள் எடுத்தாலும் பொறுப்பின்றி ரன் அவுட்டானார். அதனால் ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் ரோவ்மன் போவல் 24 (16) ஜேசன் ஹோல்டர் 13 (9) சிம்ரோன் ஹெட்மையர் 19 (19) என முக்கிய வீரர்களும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 19.1 ஓவரில் வெஸ்ட் இண்டீசை 132 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 – 1* (5) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அரஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வெற்றியால் கடந்த 2021 டி20 உலகக் கோப்பைக்குப்பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்கிய நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அனைத்து டி20 தொடர்களிலும் தோல்வியே அடையாமல் வெற்றிநடை போட்டு வருகிறது.

- Advertisement -

ரோகித்தின் பாசமழை:
மேலும் ரோகித் சர்மா தலைமையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் மொத்தம் 18 தொடர்களில் பங்கேற்ற இந்தியா 17 தொடர்களில் வென்று அசத்தி வருகிறது. இதனால் கடந்த முறை விராட் கோலி தலைமையில் லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை அக்டோபரில் நடைபெறும் டி20 உலக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரின் கடைசி 2 போட்டிகள் அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

பொதுவாகவே கிரிக்கெட் பிரபலமில்லாத அமெரிக்காவில் அதை பிரபலப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியாவை பார்ப்பதற்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்திய ரசிகர்கள் மைதானம் முழுக்க நிரம்பி வழிந்தார்கள். சொல்லப்போனால் போட்டி முழுவதும் பவுண்டரி அடிக்கும்போதும் விக்கெட்டுகள் எடுக்கும்போதும் இந்திய மண்ணில் எப்படி ஆதரவு கிடைக்குமோ அதே போன்ற ஆதரவை அங்குள்ள ரசிகர்களும் இந்தியாவுக்கு கொடுத்தனர்.

- Advertisement -

மக்களின் கேப்டன்:
அத்துடன் போட்டி முடிந்த பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பெவிலியன் திரும்பியபோது “ரோகித் ரோகித்” என்று அவரின் பெயரை விண்ணதிர ரசிகர்கள் முழங்கினர். அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ரோகித் சர்மா அவர்களை நோக்கி கை காட்டியதுடன் தடுப்புச் சுவருக்கு அருகே வந்த அனைத்து ரசிகர்களின் கைகளையும் பாரபட்சம் பார்க்காமல் தொட்ட வாக்கிலேயே மைதானத்தை ஒரு ரவுண்ட் அடித்து ரசிகர்களின் மீது பாசமழையை பொழிந்தார்.

w

அதுபோக தடுப்புச் சுவரை தாண்டி குதித்து சில ரசிகர்கள் ரோகித் சர்மாவுடன் செல்பி எடுக்க முயற்சித்தனர். அதற்கும் முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் ஒத்துழைப்பு கொடுத்த அவரை சுற்றி நிறைய ரசிகர்கள் திரண்டதால் அஞ்சிய இந்திய அணி நிர்வாக பாதுகாப்பு குழுவினர் உடனடியாக ரோகித் சர்மாவை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க : IND vs WI : மீண்டும் புதிய உலகசாதனையுடன் டி20 உ.கோ வெல்ல சிங்கநடை போடும் இந்தியா – முழுவிவரம் இதோ

இருப்பினும் ரசிகர்களை பிரிய மனமில்லாமல் சிரித்த முகத்துடன் ரோகித் சர்மா வெளியேறும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதைப் பார்க்கும் அனைத்து இந்திய ரசிகர்களும் இவர்தான் மக்களின் கேப்டன் என்று மனதார அவரைப் பாராட்டி கொண்டாடுகிறார்கள்.

Advertisement