எங்களுக்கு ஒரு பைசா பயனும் இல்லை, கண்டிப்பாக எதிர்ப்போம் – பிசிசிஐக்கு மீண்டும் சவால் விடும் பாகிஸ்தான், முழுவிவரம்

Ramiz Raja Sourav Ganguly
Advertisement

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விட ரசிகர்களை கவரும் வகையில் கடந்த 2005இல் உருவாக்கப்பட்ட 20 ஓவர்கள் கொண்ட போட்டிகள் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதை பார்த்து கடந்த 2008இல் பிசிசிஐ உருவாக்கிய ஐபிஎல் தொடர் கடந்த 15 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு பல பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர்-1 டி20 தொடராக சர்வதேச டி20 போட்டிகளையும் பின்தள்ளியுள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்கள் எதிர்பாராத திருப்பங்களை முடிவாக கொடுப்பதால் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட ஐபிஎல் தரமானதாக உள்ளதாக ஏபி டிவில்லியர்ஸ் உட்பட நிறைய ஜாம்பவான்கள் பாராட்டியுள்ளனர்.

அதேபோல் இந்த தொடரால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை கல்லா கட்டும் பிசிசிஐ சர்வதேச போட்டிகளை நடத்த ஐசிசியைவிட பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது. மேலும் இதில் விளையாடும் வீரர்களும் வெறும் 2 மாதங்களில் பல கோடிகளை சம்பளமாக அள்ளுகிறார்கள். இப்படி உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அளவுக்கு விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ள ஐபிஎல் தொடர் அடுத்ததாக வரும் 2025 முதல் 84, 94 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக மேலும் விரிவடைய உள்ளது. சமீபத்திய ஒளிபரப்பு உரிமம் 48,930 கோடிக்கு ஏலம் போனதை தொடர்ந்து இதற்கான வேலைகளை துவங்கியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

குமுறும் பாகிஸ்தான்:
மேலும் ஐபிஎல் தொடரை பார்த்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட அனைத்து நாடுகளும் ஆளாளுக்கு தங்களது நாட்டில் ஒரு டி20 தொடரை நடத்தி வருகின்றன. குறிப்பாக கடந்த 2016 முதல் பிஎஸ்எல் தொடரை நடத்திவரும் பரம எதிரியான பாகிஸ்தான் ஐபிஎல் தொடரை எப்படியாவது முந்தி விடவேண்டும் என்று கங்கணம் கட்டி எவ்வளவோ முயற்சித்தும் அதன் உயரத்தை எட்ட முடியவில்லை.

அத்துடன் 2008 வாக்கில் சோயப் அக்தர், சாகித் அப்ரிடி உட்பட நிறைய பாகிஸ்தான் நட்சத்திரங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய நிலையில் அதன்பின் எல்லைப் பிரச்சனை காரணமாக அவர்களை பிசிசிஐ தடை செய்தது. அத்துடன் சர்வதேச அளவிலும் பாகிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்திக்கொண்ட பிசிசிஐ ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளில் மட்டும் வேண்டாத வெறுப்பாக விளையாடி வருகிறது. அதன் காரணமாக சமீப காலங்களில் கடுப்பில் உள்ள பாகிஸ்தான் வாரியம் 84, 94 போட்டிகள் கொண்ட தொடராக ஐபிஎல் தொடரை விரிவுபடுத்தும் பிசிசிஐ திட்டத்தை எதிர்க்க போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

- Advertisement -

பைசா பயனில்லை:
இந்நிலையில் ஐபிஎல் விரிவாக்கத்தால் தங்களுக்கு எந்த வகையிலும் பயனில்லை என்று கருதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதை அனைத்து வகையிலும் எதிர்க்க போவதாக மீண்டும் அறிவித்துள்ளது. இது பற்றி அந்நாட்டு வாரிய முக்கிய நிர்வாகி பேசியது பின்வருமாறு. “எங்களின் வீரர்களையும் ஐபிஎல் தொடரில் விளையாடவிடுவதில்லை. அதேப்போல் எங்களுடன் பிசிசிஐ எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடுவதில்லை. எனவே ஐபிஎல் விரிவாக்கத்தை ஆதரிப்பதற்கு எங்களுக்கு என்ன லாபம் கிடைக்கிறது. அதனால் அதை எதிர்க்க பாகிஸ்தான் தெளிவாக உள்ளது. ஐபிஎல் தொடரை விரிவாக்கும் பிசிசிஐயின் முயற்சியில் எங்களது ஒரு நாடு மட்டும் தனிமையில் உள்ளது. இதர அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் பயனடைகிறது என்பதை தலைவர் ரமேஷ் ராஜா ஐசிசியிடம் எடுத்துரைக்க உள்ளார்” என்று கூறினார்.

Eshan-PCB

மேலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் வரும் ஆகஸ்ட் மாதம் திட்டமிட்டபடி 2022 ஆசிய கோப்பையை நடைபெறுவதற்கு பாகிஸ்தான் முழு ஆதரவை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது அங்கு மக்கள் புரட்சி வெடித்துள்ளதால் ஆசிய கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி கடந்த சில மாதங்களாகவே நிலவி வருகிறது. ஒருவேளை நிலைமை சீராக விட்டால் அந்த தொடரை வங்கதேசத்தில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 2-வது திட்டத்தை வைத்துள்ளது. ஆனால் இந்த மோசமான சூழ்நிலையில் இந்த தொடர் அங்கு நடைபெற்றால் இலங்கை வாரியத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி நீங்கும் என்பதால் பாகிஸ்தான் முழுமையான ஆதரவை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “தற்போதைய நிலைமையில் இலங்கை பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ளதால் ஆசிய கோப்பையை அங்கு வெற்றிகரமாக நடத்துவதற்கு பாகிஸ்தான் முழுமையான ஆதரவை கொடுக்க உள்ளது. இதுபற்றி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெறும் போது இதர நாட்டு வாரியங்களிடம் பாகிஸ்தான் தெளிவாக பரிந்துரைக்க உள்ளது. ஏனெனில் இலங்கை எங்களுக்கு எப்போதுமே நீண்ட வருடங்களாக நட்பு நாடாக இருப்பதால் அவர்களுக்கு நாங்கள் உதவ வேண்டியது அவசியமான ஒன்றாகும்” என்று கூறினார்.

Advertisement