பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருந்து நட்சத்திர வீரர் பாபர் அசாம் ஓய்வு என்ற பெயரில் கழற்றி விடப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அவரை கொண்டாடினார்கள். இருப்பினும் சமீப காலங்களில் திண்டாட்டமாக விளையாடிய பாபர் அசாம் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தார்.
அத்துடன் கடந்த மாதம் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. மேலும் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 500 ரன்கள் குவித்தும் கடைசியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டிகளில் சுமாராக பேட்டிங் செய்த பாபர் அசாம் பெரிய ரன்கள் குவிக்கவில்லை.
விராட் கோலியை வைத்து:
குறிப்பாக 2022 டிசம்பர் மாதத்திற்கு பின் டெஸ்ட் போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காததால் பொறுமையிழந்த பாகிஸ்தான் வாரியம் தற்போது அவரை அணியிலிருந்து விடுவித்துள்ளது. அந்த நிலையில் 2020க்குப்பின் 2023 வரை 19.33, 28.21, 26.50 என்ற மோசமான சராசரியில் விராட் கோலி பேட்டிங் செய்ததாக பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் கூறினார். ஆனால் அப்போதும் இந்தியா விராட் கோலியை பெஞ்சில் அமர வைக்காமல் ஆதரவளித்ததாக என்று அவர் தெரிவித்தார்.
எனவே பாகிஸ்தான் உருவாக்கிய சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாமை இப்படி ஒதுக்குவது சரியல்ல என்று ஜமான் ட்விட்டரில் நேற்று முன்தினம் பதிவிட்டார். இந்நிலையில் விராட் கோலியை மேற்கோள்காட்டி ஃபகார் ஜமான் விமர்சித்துள்ளது பாகிஸ்தான் வாரியத்திற்கு பிடிக்கவில்லை. சொல்லப்போனால் அந்தக் கருத்தின் வாயிலாக ஃபகார் ஜமான் பாகிஸ்தான் அணி தேர்வின் கொள்கைகள் விதிமுறைகளை மீறியுள்ளார்.
நோட்டீஸ் அனுப்பிய பாகிஸ்தான்:
அதாவது பாகிஸ்தான் வாரியம் எடுக்கும் முடிவை தற்போது விளையாடும் வீரர் எதிர்த்து பேசுவது அந்நாட்டு வாரியத்தின் விதிமுறையை மீறிய செயலாகும். அதனால் ஃபகார் ஜமானுக்கு பாகிஸ்தான் வாரியம் தற்போது ஃசோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது விதிமுறை மீறி பொதுவெளியில் விமர்சித்ததற்கான காரணம் கேட்டு ஃபக்கார் ஜமானுக்கு பாகிஸ்தான் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: புதிய பிரச்சனை உருவாகிருக்கு.. அதை செய்யாத வரை ஷமி ஆஸிக்கு வரமாட்டாரு.. கேப்டன் ரோஹித் கவலை பேட்டி
அதற்கான காரணத்தை வரும் அக்டோபர் 21ஆம் தேதிக்குள் நேரில் வந்து விளக்குமாறும் அவருக்கு பாகிஸ்தான் வாரியம் கெடு விதித்துள்ளது. இந்த அறிவிப்பு பாகிஸ்தான் வட்டாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் – இங்கிலாந்து மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி துவங்கியுள்ளது.



