இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடைசியாக 2023 உலகக் கோப்பையில் விளையாடினார். அந்தத் தொடரில் லேசான காயத்துடனேயே விளையாடிய அவர் அற்புதமாக பந்து வீசி இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் பின் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் ஒரு வருடம் கடந்தும் இன்னும் இந்தியாவுக்காக விளையாட வரவில்லை.
சமீபத்தில் ஓரளவு குணமடைந்த ஷமி மீண்டும் பயிற்சிகளை துவங்கியதால் இந்தியாவுக்காக விரைவில் விளையாடுவார். என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கடந்த வங்கதேச தொடரிலும் அடுத்ததாக துவங்கும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடவில்லை. இருப்பினும் முழுமையாக குணமடைந்து நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்கும் 5 போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் தொடரில் ஷமி விளையாடுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ரோஹித் கவலை:
அந்த சூழ்நிலையில் முகமது ஷமி சமீபத்தில் மீண்டும் காயத்தை சந்தித்ததால் ஆஸ்திரேலிய தொடரில் தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அது முற்றிலும் போலியான செய்தி என்று ஷமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் ஷமி புதிதாக முழங்காலில் காயத்தை சந்தித்தது உண்மை தான் என்று ரோஹித் சர்மா கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் 100% ஃபிட்டாகி சில உள்ளூர் போட்டிகளில் விளையாடாத வரை ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப் போவதில்லை என்றும் ரோஹித் சர்மா கூறியுள்ளார். இது பற்றி நியூசிலாந்து தொடருக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் ஷமி நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலிய தொடருக்கு ஃபிட்டாக இருப்பார் என்பது பற்றி முடிவு எடுப்பது கடினமாக இருக்கிறது”
ஷமி மீண்டும் காயம்:
“அவருக்கு முழங்காலில் வீக்கம் ஏற்பட்டதால் சமீபத்தில் பின்னடைவு ஏற்பட்டது அசாதாரணமானது. 100% ஃபிட்னெஸை நெருங்கும் போது அவரது முழங்காலில் வீக்கம் ஏற்பட்டது. அதனால் அவர் மீண்டு வருவதில் பின் வாங்கியுள்ளார். தற்போது என்சிஏ’வில் இருக்கும் அவர் மருத்துவர்கள் மற்றும் உடல் குழுவினருடன் வேலை செய்து வருகிறார். அவரை நாங்கள் நெருக்கமாகக் கண்காணித்து வருகிறோம்”
இதையும் படிங்க: இந்தியாவை வீட்டுக்கு அனுப்ப இப்படியா சதி பண்ணுவீங்க.. பாகிஸ்தான் அணி மீது முனாப் படேல் அதிருப்தி
“அவர் 100% ஃபிட்டாக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். முழுமையாக குணமடையாத ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வர நாங்கள் விரும்பவில்லை. ஒரு வருடமாக விளையாடாத அவர் மீண்டும் தனது சிறந்த நிலைக்கு வருவது எளிதல்ல. 100% ஃபிட்டாக அவருக்கு போதுமான நேரத்தை நாங்கள் கொடுக்க விரும்புகிறோம். அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை கொடுத்துள்ளனர். எனவே நியூசிலாந்து தொடருக்கு பின் ஆஸ்திரேலிய தொடரில் அவரால் எங்களுடன் விளையாட முடியுமா என்பதை பார்க்க வேண்டும்” என்று கூறினார்.



