சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சார்பில் நடத்தப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஒன்பதாவது சீசனாக எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இருக்கும் 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
திட்டத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை :
அந்த வகையில் ஏ பிரிவில் : இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் : ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. குரூப் சுற்று பிரிவில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
அதன் பின்னர் குரூப் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கும், அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கும் தகுதிபெறும் என்று அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை தவிர்த்து மற்ற அணிகள் மோதும் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தான் நாட்டிலும் மற்றபடி இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயிலும் நடைபெற இருப்பதாக அட்டவணை வகுக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் லாகூர் மற்றும் கராச்சி மைதானங்களில் கட்டுமான பணிகள் இன்னும் முழுமையாக முடிவு அடையவில்லை என்றும் அதனால் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறாது என்றும் இந்த தொடரை முற்றிலுமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கடந்து சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் இதனை மறுத்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து கூறியதாவது : ஊடகங்கள் உண்மையை சரிபார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் இது போன்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அது முற்றிலும் உண்மை கிடையாது. இதனால் எங்களுடைய வாரியத்தின் பொருளாதாரம் தான் பாதிக்கும்.
இதையும் படிங்க : எஸ்.ஏ டி20 லீக்கில் விளையாட ஒப்புக்கொண்டது இதற்காக தான்.. 2 காரணங்களை கூறிய – தினேஷ் கார்த்திக்
இது போன்ற பொய்யான செய்திகளால் எங்களுடைய தரத்தை குறைக்க நினைக்கிறார்கள். ஆனால் இது எதுவுமே உண்மை கிடையாது. சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் திட்டமிட்டபடி நடைபெறும். இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்கும் என்று பாகிஸ்தான் வாரியம் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.