விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டிக்காக நடைபெற்று வரும் சிறப்பு ஏற்பாடுகள் – என்னென்ன தெரியுமா?

kohli
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோவில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இந்த தொடரின் எஞ்சிய 2 போட்டிகளிலும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

INDvsSL

- Advertisement -

அதன்பின் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இவ்விரு அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முறையே மொகாலி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் பெங்களூருவில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது சிறப்பம்சமாகும்.

ரோஹித் தலைமையில் விராட்:
இந்த தொடருக்காக புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப் பட்டது. அதில் தற்போது நடைபெற்று வரும் இலங்கை டி20 தொடரில் ஓய்வெடுக்கும் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோர் அணிக்கு திரும்புகிறார்கள். இதில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் சாதாரண வீரராக விளையாடுவதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

kohli

ஏனெனில் கடந்த 2014ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி அந்த சமயத்தில் 7வது இடத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இந்தியாவை தனது அதிரடியான ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக வலம் வர வைத்தார். மேலும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் கேப்டனாக பொறுப்பேற்ற சொந்த மண்ணில் மட்டும் வெற்றி பெறும் அணியாக இருந்த இந்தியாவை வெளிநாடுகளில் வெற்றி பெறும் அணியாக மாற்றி விட்டு விடைபெற்றுள்ளார்.

- Advertisement -

மேலும் 68 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்று இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான கேப்டனாக மெகா சாதனை படைத்துள்ள அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்ஷிப் பற்றிய பெரிய அனுபவம் இல்லாத ரோகித் சர்மா தலைமையில் விளையாட உள்ளார்.

Kohli-1

மொஹாலியில் 100வது டெஸ்ட்:
இந்த வேளையில் மொகாலியில் வரும் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியின் போது விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி புதிய மைல்கல்லை எட்ட உள்ளார். முன்னதாக இந்த தொடருக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அட்டவணையின்படி முதல் போட்டி பெங்களூருவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதை சமீபத்தில் மாற்றி அமைத்த பிசிசிஐ முதல் போட்டியை மொஹாலியிலும் 2வது போட்டி பெங்களூருவிலும் நடைபெறும் என அறிவித்தது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இப்போதும் கூட விளையாடி வரும் அவருக்கு பெங்களூருவில் ஏகப்பட்ட ரசிக பட்டாளங்கள் உள்ளது. சொல்லப்போனால் பெங்களூரு மக்களில் ஒருவராக உருவெடுத்துள்ள அவர் டெல்லிக்கு அடுத்து பெங்களூர் தான் தனது 2வது வீடு என பலமுறை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

Virat-Kohli

அதன் காரணமாக தனது 100வது டெஸ்ட் போட்டியை தமக்கு பிடித்த ரசிகர்கள் இருக்கும் பெங்களூருவில் விளையாட இருந்ததால் அவரும் அவரின் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் தற்போது அந்தப் போட்டி மொஹாலிக்கு மாற்றப்பட்டுள்ளதால் பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தனது 100வது டெஸ்ட் போட்டியை பஞ்சாப் மாநிலம் மொகாலியில் விளையாட இருக்கும் விராட் கோலியை கௌரவிக்க பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

கௌரவிக்கும் பஞ்சாப்:
குறிப்பாக 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வரும் விராட் கோலியை அவரின் ஹோட்டல் அறையில் இருந்து மைதானத்திற்கு வரும் வரை வழிநெடுகிலும் வரவேற்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட்டுக்காக பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் விலைமதிப்பில்லா பங்காற்றியுள்ள விராட் கோலியை கௌரவிக்கும் வண்ணம் அவருக்கு ஒரு நினைவு பரிசை வழங்கி பெருமைப்படுத்த பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதன் செயலாளர் ஆர்பி சிங்களா அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : திடீரென 6 மாசத்துல இவர் இவ்ளோ பெரிய பிளேயரா மாற்றிட்டாரு – இளம்வீரரை பார்த்து ஆச்சரியப்பட்ட கோலி

பெங்களூருவில் விளையாடாமல் போனாலென்ன நாங்கள் இருக்கிறோம் என்ற வகையில் விராட் கோலியை பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் கௌரவப்படுத்த உள்ளதை நினைத்து அவரின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இருப்பினும் இந்தப் போட்டி ரசிகர்கள் அனுமதியின்றி மூடப்பட்ட காலி மைதானத்தில் நடைபெறும் என பஞ்சாப் கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குனர் தீபக் சர்மா அறிவித்துள்ளார்.

Advertisement