உ.கோ மைதானங்களில் மெகா அரசியல், ஜெய் ஷா’க்கு எதிராக கொந்தளிக்கும் மாநில வாரியங்கள் – ரசிகர்கள், விவரம் இதோ

Jay Shah
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்குகிறது. சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரை 1987, 2011 ஆகிய வருடங்களில் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக தற்போது தங்களது சொந்த மண்ணில் நடத்துவது ஸ்பெஷலாகும். அதை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்தியா நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் 28ஆம் தேதியான நேற்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் இத்தொடருக்கான முழு அட்டவணையை வெளியிடப்பட்டது. அதன் படி அக்டோபர் 5ஆம் தேதி துவங்கும் இந்த உலகக் கோப்பை நவம்பர் 19ஆம் தேதி வரை அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, சென்னை, தரம்சாலா, ஹைதராபாத், லக்னோ, புனே போன்ற இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருக்கும் 10 வெவ்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது.

- Advertisement -

விளையாட்டில் அரசியல்:
ஆனால் இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட மைதானங்கள் பெரும்பாலான ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் அக்டோபர் 5ஆம் தேதி நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதும் துவக்க போட்டியும் அக்டோபர் 15ஆம் தேதி ஒட்டு மொத்த உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியும் குஜராத் மாநிலத்தில் இருக்கும் உலகின் மிகப்பெரிய நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அது போக நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியும் அந்த மைதானத்திலேயே நடைபெற உள்ளது.

அந்த வகையில் இந்த உலகக் கோப்பையின் முக்கிய போட்டிகள் அனைத்தையும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் அளவுக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக இருப்பதால் ஒதுக்கியுள்ளதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். சொல்லப்போனால் “மோட்டேரா” என்ற பெயருடன் 2011 உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியை நடத்திய பெருமையைக் கொண்ட அகமதாபாத் மைதானம் 2019 வரை இந்தியாவின் இதர மைதானங்களை போல் சாதாரணமாகவே இருந்து வந்தது.

- Advertisement -

ஆனால் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய அரசின் தலைமை பொறுப்பில் வந்ததால் 1,10,000 ரசிகர்கள் அமரும் வகையில் பெரிதாக கட்டமைக்கப்பட்டு பெயரும் மாற்றப்பட்டு தற்போது ஐபிஎல் முதல் சர்வதேசம் வரை அனைத்து முக்கிய போட்டிகள் நடைபெறும் இடமாக செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. ஏனெனில் அகமதாபாத்தை விட கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ், சென்னை சேப்பாக்கம், மும்பை வான்கடே, டெல்லி ஆகிய மைதானங்கள் தான் இந்தியாவில் நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும்.

இருப்பினும் தற்போது அந்த மைதானங்களை சாதாரணமாக மாற்றப்பட்டு அகமதாபாத் உயரியதாக காண்பிக்கப்படுகிறது. மேலும் 1987, 2011 ஆகிய வருடங்களில் நடைபெற்ற உலகக் கோப்பைகளில் மெட்ரோ நகரங்கள் மண்டலம் வாரியாக அனைத்து போட்டிகளும் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஆனால் இம்முறை அதை பின்பற்றாத ஜெய் ஷா குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்துக்கு முன்னுரிமை கொடுத்ததால் ராஜ்கோட், ராஞ்சி, நாக்பூர், இந்தூர் போன்ற மைதானங்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளன.

- Advertisement -

குறிப்பாக 2011 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய மாபெரும் அரையிறுதி போட்டியை நடத்திய மொகாலிக்கு இம்முறை ஒரு லீக் போட்டி கூட கிடைக்கவில்லை. அதனால் ஏமாற்றமடைந்துள்ள பஞ்சாப் மாநில வாரியம் பிசிசிஐ அரசியல் செய்துள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்தூர் மைதான நிர்வாகி கண்டேக்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “1987 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து போட்டியை இந்தூர் நடத்தியது. அப்படி வரலாறு கொண்ட எங்களது மைதானத்தை ஏன் பிசிசிஐ புறக்கணித்தது என தெரியவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:2011 ல சச்சினுக்காக இந்தியா ஜெயிச்ச மாதிரி.. இந்தமுறை இவருக்காக நீங்க ஜெயிக்கனும் – சேவாக் வேண்டுகோள்

மேலும் அஹமதாபாத் மைதானம் 3 முக்கிய போட்டிகளையும் அருகில் இருக்கும் தரம்சாலா மைதானம் 5 போட்டிகளையும் நடத்தும் நிலையில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்ற நட்சத்திரங்களை உருவாக்கி டாப் 5 மைதானங்களில் ஒன்றாக இருந்து வந்த மொஹாலிக்கு அரசியல் காரணங்களால் ஒரு போட்டி கூட கிடைக்கவில்லை என பஞ்சாப் மாநில விளையாட்டு துறை அமைச்சர் குர்மீட் சிங் வெளிப்படையாகவே ஜெய் ஷா’வை விமர்சித்துள்ளார்.

Advertisement