ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி ஹைதராபாத் 27வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கிய பிரியான்ஸ் ஆர்யா 4 ஓவரில் 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 36 (13) ரன்கள் விளாசி அவுட்டானார்.
அடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கு ஹைதராபாத் பவுலர்களை புரட்டி எடுத்தார். அவருடன் சேர்ந்து மறுபுறம் விளையாடிய ப்ரம்சிம்ரன்சிங் 42 (23) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருக்கு அடுத்ததாக வந்த நேஹல் வதேரா 27 (22), சசாங் சிங் 2 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
பஞ்சாப் மிரட்டல்:
ஆனால் அவர்களுக்கும் சேர்த்து மறுபுறம் வெளுத்து வாங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதத்தை அடித்து அசத்தினார். அப்போது எதிர்ப்புறம் வந்த மேக்ஸ்வெல் தடுமாறி 3 (7) ரன்னில் அவுட்டானார். இந்தப் பக்கம் தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஸ்ரேயாஸ் 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 82 (36) ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார்.
கடைசி நேரத்தில் ஹைதராபாத் பவுலர்களை சூறையாடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 34* (11) ரன்கள் விளாசி மாஸ் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் 245/6 ரன்கள் குவித்த பஞ்சாப் ஐபிஎல் தொடரில் தங்களுடைய இரண்டாவது பெரிய ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் இதே தொடரில் அகமதாபாத் நகரில் குஜராத்துக்கு எதிராக 243/5 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
ஷமி மோசமான சாதனை:
பொதுவாகவே ஹைதராபாத் அணி தங்களது சொந்த மண்ணில் எதிரணிகளை அடித்து நொறுக்குவது வழக்கமாகும். ஆனால் இந்தப் போட்டியில் அந்த அணிக்கு அதனுடைய சொந்த மண்ணில் பஞ்சாப் அதிரடியை காட்டியது என்றே சொல்லலாம். ஹைதராபாத்துக்கு அதிகபட்சமாக ஈசான் மலிங்கா 2, ஹர்ஷல் படேல் 4 விக்கட்டுகளை சாய்த்தனர்.
இதையும் படிங்க: நல்லவேளை பூரான் லக்னோவில் இருக்காரு.. 200 அடிக்க வேண்டிய குஜராத்தை இதை செஞ்சு ஜெயிச்சோம்.. பண்ட் பேட்டி
இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் முகமது ஷமி 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 75 ரன்கள் வழங்கினார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வழங்கிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை ஷமி படைத்துள்ளார். இதற்கு முன் 2024இல் டெல்லிக்கு எதிராக குஜராத் அணியின் மோஹித் சர்மா 73 ரன்கள் வழங்கியதே முந்தைய சாதனை.



