205 ரன் அடிச்சதுக்கு பிறகும் இப்படியா? ஒரிஜினல் ஆர்சிபி இஸ் பேக் – என கலாய்க்கும் ரசிகர்கள்

PBKS vs RCB2 Odean Smith Shahrukan
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 2022 தொடர் மிகவும் விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. இந்த தொடரில் நேற்று நடந்த 2-வது நாளில் 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் புதிய கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

PBKS vs RCB

- Advertisement -

இதை அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய புதிய கேப்டன் டு பிளேஸிஸ் அனுஜ் ராவத் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதில் 21 (20) ரன்கள் எடுத்திருந்தபோது அனுஜ் ராவத் அவுட்டான நிலையில் அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டுப்லஸ்ஸிஸ் தொடர்ந்து பஞ்சாப் பந்துவீச்சாளர்களை அதிரடியாக விளாசினார்.

அசத்திய டு பிளேஸிஸ் – விராட் கோலி:
இந்த ஜோடியில் இருவருமே அதிரடியாக பேட்டிங் செய்து 3-வது விக்கெட்டுக்கு 118 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்து பெங்களூர் அணியை வலுப் பெறச் செய்தனர். அதில் 57 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 7 இமாலய சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 88 ரன்கள் எடுத்திருந்தபோது டு ப்லஸ்ஸிஸ் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனது பங்கிற்கு பஞ்சாப் பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடித்து கடைசி நேரத்தில் அதிரடியாக 14 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 32* ரன்கள் எடுத்து அபார பினிஷிங் கொடுத்தார். அவருடன் பட்டைய கிளப்பிய விராட் கோலி 29 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 41* ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு 205/2 ரன்களை எடுத்தது.

Virat Faf Du Plessis

தைரியமான பஞ்சாப்:
இதை தொடர்ந்து 206 என்ற மிகப்பெரிய இலக்கை தைரியமாக துரத்திய பஞ்சாப் அணிக்கு அதன் கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் ஆகிய தொடக்க வீரர்கள் பவர்பிளே ஓவர்களில் பட்டைய கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் குவித்து மிகச் சிறந்த தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் தலா 2 பவுண்டரி மற்றும் சிக்சர் உட்பட 32 (24) ரன்கள் எடுத்திருந்த மயங்க் அகர்வால் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து பேட்டிங் செய்த ஷிகர் தவான் 29 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அடுத்ததாக களமிறங்கிய இலங்கையின் இளம் வீரர் ராஜபக்சே 22 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் உட்பட 43 ரன்கள் எடுத்த நிலையில் முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். இப்படி டாப் 3 வீரர்கள் அடுத்தடுத்து பெரிய ரன்களை அடித்ததால் பஞ்சாப் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியான வேளையில் களமிறங்கிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் 19 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக களமிறங்கிய இளம் வீரர் ராஜ் பாவா டக் அவுட்டானதால் பஞ்சாப் அணிக்கு திடீரென பின்னடைவு ஏற்பட்டது.

Odean Smith

8 பந்துகளில் மிரட்டிய ஸ்மித்:
அதனால் கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கிய தமிழக இளம் வீரர் ஷாருக்கான் தனது அணியை வெற்றிபெற வைக்க போராடினார். ஆனால் அவருக்கு பின் கடைசி நேரத்தில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஓடென் ஸ்மித் யாருமே எதிர்பாரா வண்ணம் வெறும் 8 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 3 இமாலய சிக்சர் உட்பட 25* ரன்கள் குவித்து பெங்களூர் அணியின் வெற்றிக் கனவை சுக்குநூறாக உடைத்தார். அவருடன் பேட்டிங்கில் அசத்திய சாருக்கான் 20 பந்துகளில் 24* ரன்கள் எடுக்க 19 ஓவர்களிலேயே 208/5 ரன்கள் எடுத்த பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இந்த ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

மறுபுறம் எளிதான வெற்றியை எதிரணியிடம் கோட்டைவிட்ட பெங்களூரு முதல் போட்டியிலேயே பரிதாப தோல்வி அடைந்துள்ளது. இப்போட்டியில் வெறும் 8 பந்துகளில் பெங்களூரு ரசிகர்களை கதறவிட்டு பஞ்சாப் அணிக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்த ஓடென் ஸ்மித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதற்கு முன் இதுபோல எத்தனையோ போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை அசால்டாக அடித்த பெங்களூரு இதுபோல மோசமான பந்து வீச்சு காரணமாக வரலாற்றில் எத்தனையோ போட்டிகளில் எளிதான வெற்றியை எதிரணிக்கு பரிசளித்து வந்தது.

ஆனால் தற்போது புதிய கேப்டன் டு பிளேஸிஸ் தலைமையில் நேற்று முதல் போட்டியில் 200க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த போது பெங்களூரு வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மீண்டும் கடைசி நேரத்தில் பந்துவீச்சில் சொதப்பிய அந்த அணி நல்ல வெற்றியை பஞ்சாப் பணியிடம் கோட்டை விட்டு நிற்பதை பார்க்கும் எதிரணி ரசிகர்கள் “கேப்டன் மாறினாலும் ஒரிஜினல் ஆர்சிபி இஸ் பேக்” என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Advertisement