3வது அம்பயர் மைக்கேல் என் நண்பன் தான்.. சரியான தீர்ப்பில் இப்படி செஞ்சது தப்பு.. காலிங்வுட் விமர்சனம்

Paul Collingwood
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி நடைபெற்ற 56வது லீக் ராஜஸ்தானை 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அபிஷேக் போரேல் 65, பிரேசர்-மெக்குர்க் 50, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 41 ரன்கள் எடுத்த உதவியுடன் 222 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதைத் துரத்திய ராஜஸ்தானுக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 86 (46) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார்.

இருப்பினும் எதிர்ப்புறம் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் 20 ஓவரில் ராஜஸ்தான் 201/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. முன்னதாக அப்போட்டியில் முகேஷ் குமார் வீசிய 15வது ஓவரின் நான்காவது பந்தில் சஞ்சு சாம்சன் சிக்ஸரை அடித்தார். அதை பவுண்டரி எல்லையில் இருந்து டெல்லி வீரர் சாய் ஹோப் கச்சிதமாக பிடித்தார்.

- Advertisement -

நண்பனின் தவறு:
அப்போது அவருடைய ஒரு கால் பவுண்டரி எல்லையில் 2 முறை தொட்டது போல் தெரிந்தால் அதை சோதிக்குமாறு களத்தில் இருந்த நடுவரிடம் சஞ்சு சாம்சன் வாதிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நடுவர் 3வது நடுவரின் உதவியை நாடினார். ஆனால் அதை சரியாக சோதிக்காத 3வது நடுவர் மைக்கேல் கௌ அரையும் குறையுமாக பார்த்து விட்டு ஒரு நிமிடத்திற்குள் சஞ்சு சாம்சன் அவுட் என்று மீண்டும் அதே தீர்ப்பை வழங்கினார். அந்தத் தீர்ப்பு ராஜஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால் அடுத்த சில ஓவரில் சாதாரண ஒயிட் பந்தை 3வது நடுவர் 3 நிமிடம் சோதித்தது ரசிகர்களை கடுப்பாக்கியது. இந்நிலையில் தம்முடைய நண்பனான மைக்கேல் கௌ சரியான தீர்ப்பையே வழங்கியிருப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட் தெரிவித்துள்ளார். இருப்பினும் டெக்னாலஜியை பயன்படுத்தி பல்வேறு கோணங்களில் பவுண்டரியில் கால் பட்டதா? என்பதை அவர் சோதித்திருக்க வேண்டும் என்றும் காலிங்வுட் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “கௌ என்னுடைய மிகச் சிறந்த நண்பர். எனவே அவருக்கு நான் ஆதரவு கொடுக்கப் போகிறேன். இருப்பினும் மற்றொரு கோணத்தில் அவர் அதை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதியாக சோதித்து பார்த்திருக்க வேண்டும். ஏனெனில் அந்தளவுக்கு அது மிகவும் நெருக்கமாக இருந்தது. இது போன்ற முடிவுகள் தான் வெற்றியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்”

இதையும் படிங்க: கையில் இருந்த மேட்சை கோட்டை விட்டுட்டோம்.. டெல்லி அணிக்கெதிரான தோல்வி குறித்து – சஞ்சு சாம்சன் வருத்தம்

“எனவே அவர் தமக்குத் தாமே இன்னும் கொஞ்சம் நேரம் கொடுத்து நன்றாக சோதித்திருக்க வேண்டும். இருப்பினும் ஐபிஎல் தொடரில் நடுவர்கள் வேகமாக முடிவெடுக்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் சொல்லி இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் இன்னும் சில கோணங்களில் சோதித்து பார்த்திருந்தால் அனைவரது சந்தேகமும் தீர்ந்திருக்கும்” என்று கூறினார்.

Advertisement