இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்ட அந்த அணி 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களில் வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை பரிசளித்த இந்தியாவை இம்முறை அவர்களுக்கு சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் அதற்காக பிட்ச் பற்றி ஆரம்பத்திலேயே விமர்சித்த அந்த அணியினர் வாயில் பேசியதை செயலில் காட்டாமல் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தனர்.
அதனால் அவமானத்தை சந்தித்த ஆஸ்திரேலியா டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு 263 ரன்கள் குவித்தாலும் 2வது இன்னிங்ஸில் மீண்டும் ரவீந்திர ஜடேஜாவின் அதிரடியான பந்து வீச்சில் 113 ரன்களுக்கு சுருண்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக இத்தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்த அந்த அணி 2004க்குப்பின் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கனவையும் நிஜமாக்க தவறியுள்ளது.
நாடு திரும்பிய கமின்ஸ்:
அத்துடன் கடைசியாக கடந்த 2014/15 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றிருந்த அந்த அணி அதன் பின் தொடர்ந்து 4 தொடர்களில் தோல்வியை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மிகப்பெரிய பின்னடைவையும் விமர்சனத்தையும் சந்தித்துள்ள ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் அடுத்த 2 போட்டிகளில் வென்று 2 – 2 (4) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்று முடிந்த 2வது போட்டியை முடித்துக் கொண்டு நேற்றிரவு ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் அவசரமாக நாடு திரும்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரைப் பார்ப்பதற்காக பட் கமின்ஸ் நாடு திரும்பியுள்ளதாக ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது. இருப்பினும் மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கும் இத்தொடரின் 3வது போட்டிக்கு முன்பாக அவர் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைந்து கொள்வார் என்றும் அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இது பற்றி ஆஸ்திரேலிய வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “தனது குடும்பத்தில் உள்ள சிலருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர்களை பார்ப்பதற்கு பட் கமின்ஸ் நாடு திரும்பியுள்ளார். இருப்பினும் இந்த வார இறுதியில் அவர் இந்தியாவுக்கு திரும்பி இந்தூரில் நடைபெறும் 3வது போட்டிக்கு தேவையான வலைப்பயிற்சியில் ஈடுபடுவார். எனவே அவருடைய சொந்த பயணத்தை ஊடகங்கள் மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது இந்தூரில் நடைபெறும் 3வது போட்டிக்கு முன்பாக இன்னும் முழுமையாக 7 நாட்கள் இருப்பதால் ஆஸ்திரேலிய வாரியத்தின் அனுமதியுடன் நாடு திரும்பியுள்ள பட் கமின்ஸ் விரைவில் குடும்பத்தை பார்த்து விட்டு இந்தியாவுக்கு திரும்புவார் என்று தெரிய வருகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் 3வது போட்டியில் அவரது தலைமையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்ற லட்சியத்துடன் ஆஸ்திரேலிய அணியினர் களமிறங்க உள்ளனர்.
இதையும் படிங்க: IND vs AUS : உண்மையிலே இதை நெனச்சா கஷ்டமா இருக்கு. தோல்விக்கு பிறகு – பேட் கம்மின்ஸ் பேசியது என்ன?
குறிப்பாக வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு பழகிய அவர்கள் இந்தியாவில் அஸ்வின் – ஜடேஜா போன்ற தரமான அனுபவமிக்க ஸ்பின்னர்களின் சுழலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 2 மணி நேரத்திற்குள் மட மடவென விக்கெட்டுகளை பரிசளித்தனர். அதிலும் குறிப்பாக நேராக வரும் பந்துகளை கூட எதிர்கொள்வதற்கு தேவையான டெக்னிக் தெரியாமல் தடுமாறும் அவர்கள் ஸ்வீப் ஷாட் அடித்து க்ளீன் போல்ட்டானார்கள். எனவே எஞ்சிய 2 போட்டிகளில் வெல்வதற்கு முதலில் ஆஸ்திரேலிய அணியினர் சுழல் பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு தேவையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.



