WTC Final : இந்தியாவை வீழ்த்த தரமான ஆஸி பிளேயிங் லெவனை – முதல் நாளே மறைமுகமாக அறிவித்த பட் கமின்ஸ்

AUs vs IND
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது. வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த போராட உள்ளது. மேலும் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தாலும் 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த மிகப்பெரிய தன்னம்பிக்கையுடன் இந்தியா களமிறங்குகிறது.

மறுபுறம் உலகிலேயே அதிக ஐசிசி உலக கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா இந்த கோப்பையையும் முதல் முயற்சியிலேயே வென்று சமீப காலங்களில் இந்தியாவிடம் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது. இப்போட்டியில் வெற்றி காண்பதற்கு தரமான பிளேயிங் லெவனை தேர்வு செய்வது அவசியமாக பார்க்கப்படும் நிலையில் ஓவல் மைதானத்தில் எந்த மாதிரியான வானிலை நிலவும் என்பதை பொறுத்து இரு அணிகளும் தங்களுடைய 11 பேர் அணியை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

முதல் நாளே அறிவித்த கமின்ஸ்:
இந்நிலையில் இந்த மாபெரும் போட்டியில் களமிறங்கும் 11 பேர் அணியை ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் மறைமுகமாக அறிவித்துள்ளார். குறிப்பாக கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறிய ஜோஸ் ஹேசல்வுட்க்கு பதிலாக விளையாடப் போவது யார் என்பதே அந்த அணியில் குழப்பமாக இருந்தது. அந்த நிலையில் புதிதாக அணியில் சேர்க்கப்பட்ட மைக்கேல் நீசரை விட ஏற்கனவே 7 போட்டிகளில் 28 விக்கெட்களை எடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய ஸ்காட் போலண்ட் இப்போட்டியில் விளையாடுவார் என்று கமின்ஸ் அறிவித்துள்ளார்.

இது பற்றி போட்டிக்கு முந்தைய நாளில் அவர் பேசியது பின்வருமாறு. “இதற்கு முன் இங்கிலாந்து கால சூழ்நிலைகளில் பந்து அதிகமாக பேசியுள்ளது. நல்ல பேட்ஸ்மேன்களும் கேட்ச் கொடுத்து அவுட்டாகியுள்ளார்கள். குறிப்பாக இங்கு திடீரென்று பந்து வேகமாக ஸ்விங் ஆகும் என்பதால் பவுலர்கள் ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுகள் எடுக்க முயற்சிக்கும் அளவுக்கு சாதகமாக இருக்கும். அது போன்ற சூழ்நிலைகளில் ஸ்காட் எங்களுடைய எளிமையான திட்டத்தை முழுமையாக்குபவராக இருப்பார்”

- Advertisement -

“சரியான ஒரே இடத்தில் நீங்கள் தொடர்ந்து ஒரு நாள் முழுவதும் பந்து வீசினால் நிச்சயமாக உங்களுக்கு சாதகமான அம்சங்கள் நடக்கும் என்று நம்பலாம். இங்கே அவர் சில நல்ல ஓவர்களை வீசியுள்ளார். அதை விட ஆஸ்திரேலியாவுக்காக இதற்கு முன் விளையாடிய போதெல்லாம் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்” என்று கூறினார். மேலும் இந்தியாவை போல ஆஸ்திரேலியாவிடம் 2 தரமான ஸ்பின்னர்கள் இல்லாததால் நேதன் லயன் மட்டும் விளையாடுவதில் எந்த குழப்பமும் இல்லை. அதன் காரணமாக அவருடைய இந்த அறிவிப்பால் ஆஸ்திரேலியாவின் 11 பேர் அணியை அந்நாட்டு ஊடகங்கள் இப்போதே 99 சதவீதம் கணித்துள்ளன.

ஏனெனில் எப்படியாக இருந்தாலும் அந்த அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவஜா ஆகியோர் தான் களமிறங்க போகிறார்கள். அதே போல அடுத்த 2 இடங்களில் உலகின் நம்பர் ஒன் மற்றும் 2 பேட்ஸ்மேன்களாக இருக்கும் லபுஸ்ஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் விளையாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மிடில் ஆர்டரில் அதிரடியாக ரன்களை சேர்க்க டிராவிஸ் ஹெட் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி ஆகியோருடன் ஆல் ரவுண்டராகவும் 4வது பவுலராகவும் கேமரூன் கிரீன் விளையாடுவார்.

இதையும் படிங்க:WTC Final : இங்க வந்ததே பெருசு தான், ஃபைனலில் அது நடந்தாலும் நாங்க கவலைப்பட மாட்டோம் – டிராவிட் பேட்டியால் ரசிகர்கள் அதிருப்தி

அதே போல் பந்து வீச்சில் மிட்சேல் ஸ்டார்க், பட் கமின்ஸ், நேதன் லயன், ஸ்காட் போலாண்ட் ஆகியோர் விளையாடுவார்கள் என்று உறுதியாக நம்பப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் இந்த ஃபைனலில் ஆஸ்திரேலியாவின் 11 பேர் அணி இதோ: டேவிட் வார்னர், உஸ்மான் கவஜா, மார்னஸ் லபுஸ்ஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (கீப்பர்), பட் கமின்ஸ் (கேப்டன்), மிட்சேல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலண்ட்

Advertisement