இதற்குத் தான் ஆசைப்பட்டீங்களா? வார்னர், வில்லியம்சன் வரிசையில் மாற்றம்.. புதிய கேப்டனை அறிவித்த ஹைதராபாத்

SRH 24
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. இந்திய ரசிகர்களை கோடைகாலத்தில் மகிழ்விக்கப் போகும் இந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் தயாராகியுள்ளன. அதற்காக தங்களுக்கு தேவையான வீரர்களை கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் போட்டி போட்டு வாங்கின.

அதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆஸ்திரேலிய வீரர் பட் கமின்ஸை 20.50 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் 20 கோடிக்கு விலை போன முதல் வீரர் என்ற சாதனையை பட் கமின்ஸ் படைத்தார். இந்நிலையில் ஐபிஎல் 2024 தொடரில் தங்களுடைய புதிய கேப்டனாக பட் கமின்ஸ் நியமிக்கப்படுவதாக ஹைதராபாத் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

புதிய கேப்டன்:
2016இல் கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னரை அசால்ட்டாக அவமானப்படுத்தி 2021 சீசனில் கழற்றி விட்ட ஹைதராபாத் கேன் வில்லியம்சனை புதிய கேப்டனாக நியமித்தது. இருப்பினும் வார்னரை போலவே காயமடைந்து சுமாராக விளையாடி கோப்பையை வெல்லத் தவறியதால் அவரையும் கழற்றி விட்ட ஹைதராபாத் அணி நிர்வாகம் பின்னர் தென்னாபிரிக்காவின் ஐடன் மார்க்ரமை புதிய கேப்டனாக அறிவித்தது.

ஆனால் அவருடைய தலைமையிலும் 2023 சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் ஹைதராபாத் பரிதாபமாக வெளியேறியது. இருப்பினும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2023 எஸ்ஏ20 தொடரில் ஹைதராபாத் அணியின் கிளையான சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு முதல் வருடத்திலேயே கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்த ஐடன் மார்க்ரம் இந்த வருடமும் இரண்டாவது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார்.

- Advertisement -

அந்த வகையில் 2 கோப்பைகளை வென்ற அனுபவத்தைக் கொண்ட அவருக்கு மீண்டும் 2024 சீசனில் ஹைதராபாத் வாய்ப்பு வழங்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் வார்னர், வில்லியம்சன் போன்ற மகத்தான வீரர்களையே அசால்டாக கழற்றி விட்ட ஹைதராபாத் தற்போது ஐடன் மார்க்ரமையும் கழற்றி விட்டு 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஆகிய 2 ஐசிசி கோப்பைகளை ஒரே வருடத்தில் ஆஸ்திரேலியாவுக்காக வென்ற அனுபவமிக்க பட் கமின்ஸை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் தோனி சிறந்தவரா? எங்களிடமும் சுயநலமற்ற பிளேயர் இருக்காரு.. இங்கிலாந்து வீரரை பாராட்டிய டேவிட் லாய்ட்

ஹைதெராபாத் அணியின் இந்த அறிவிப்பை பார்க்கும் ரசிகர்கள் “இதற்கு ஆசைப்பட்டுத் தான் 2024 ஐபிஎல் ஏலத்தில் பட் கமின்ஸை 20.50 கோடி கொடுத்து வாங்கினீர்களா” என்று ரியாக்சன் கொடுத்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து நடைபெறும் 2024 சீசனில் பட் கமின்ஸ் தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் ஹைதராபாத் தங்களுடைய முதல் போட்டியில் மார்ச் 23ஆம் தேதி கொல்கத்தாவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement