இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான பார்திவ் பட்டேல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2002ஆம் ஆண்டு தனது 17 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமாகிய அவர் தனது முழு திறமையை வெளிக்காட்டியவர். இவர் முதன்முதலாக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். இளம்வயதிலேயே உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாட அதன் காரணமாக இவர் இந்திய அணியில் இடம் பெற்றார். இருப்பினும் கடந்த சில வருடங்களாக இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் அவருக்கு அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரிலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பார்திவ் பட்டேல் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
தனது ஓய்வு முடிவை அறிவித்த பின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் சிறப்பம்சங்களையும் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ளார்.
அப்போது 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட வேண்டும் என்று தனது விருப்பத்தை கூறியுள்ளார் பார்திவ் பட்டேல். ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியை வழிநடத்தும் விராட் கோலி ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை வென்றதில்லை.
ஆனால் மும்பை அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் துணை கேப்டனான ரோகித் சர்மாவுக்கு ஒரு அணியை எவ்வாறு வழி நடத்துவது என்பது நன்றாக தெரியும். இதன் காரணமாக தான் ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடரில் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தால் சிறப்பாக இருக்கும். இதன்மூலம் சக வீரர்கள் விராட் கோலியின் அழுத்தங்கள் இல்லாமல் சிறப்பாக விளையாட முடியும் என்றார் பார்திவ் பட்டேல்.
ரோகித் சர்மா தற்போது காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் விளையாட முடியாமல் போனது. விரைவில் குணமடைந்தால் 2021 ஆம் ஆண்டில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு அவரை இந்திய அணி கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற தனது கருத்தை கூறியுள்ளார் பார்த்தீவ் பட்டேல். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 2018ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் டி20 கோப்பை, ஆசிய கோப்பை ஆகிய தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.