ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. மறுபுறம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பெங்களூரு போராடி வென்றது. அதனால் சென்னையை வெளியேற்றிய அந்த அணி அதைக் கோப்பையை வென்றது போல் கொண்டாடித் தீர்த்தது.
ஏனெனில் 2008 முதல் தொடர்ந்து விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இத்தனைக்கும் அந்த அணிக்கு ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் கேப்டனாக செயல்பட்டனர். அவர்களது தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ், ஷேன் வாட்சன் போன்ற நிறைய மகத்தான வீரர்கள் விளையாடினர்.
தோல்விக்கான காரணம்:
ஆனால் அப்படி ஜாம்பவான்கள் தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் விளையாடும் பெங்களூரு அணி முக்கிய நேரத்தில் சொதப்பி வெற்றியையும் கோப்பையும் எதிரணிக்கு தாரை வார்த்து வருகிறது. அதனால் ஆர்சிபி எப்போதும் கோப்பையை வெல்லாது என்று எதிரணி ரசிகர்கள் பெங்களூரு அணியை கிண்டலடிப்பது வழக்கமாகும். அந்த அணியின் இந்த தோல்விக்கு பல வல்லுனர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஏலத்தில் தரமான வீரர்களை வாங்காதது, ஒரு சில தோல்விகளை சந்தித்தால் உடனடியாக பிளேயிங் லெவனில் மாற்றம் செய்வது, வீரர்களுக்கு போதிய ஆதரவு கொடுக்காதது போன்றவை பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணமாக இருப்பதாக கருத்துக்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் பெங்களூரு அணியில் விராட் கோலி, கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.
அந்த வகையில் அனைத்து வீரர்களும் சமமாக நடத்தப்படாததாலேயே அந்த அணி தோல்வியை சந்தித்து வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஆர்சிபி அணிக்காக நான் 4 வருடங்கள் விளையாடியுள்ளேன். அது எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணியாகும். அங்கே அனைவரும் அணியாக இருக்க மாட்டார்கள்”
இதையும் படிங்க: ரோஹித் மாறல.. ஆனா அவர் புகழ் வந்ததும் பேசுறது கூட இல்ல.. ஆளே மாறிட்டாரு.. மிஸ்ரா ஆதங்கம்
“இதை அந்த அணியிலிருந்து வெளியே வரும் அனைவருமே சொல்வார்கள். ஏனெனில் நான் பெங்களூரு அணியில் இருந்த போது அங்கே விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் தான் அனைத்துமாகும். அங்கே அவர்களுக்கு ஸ்பெஷல் முன்னுரிமை கொடுக்கப்படும். எனவே அங்கே அணி கலாச்சாரம் கிடையாது என்பதை அவர்கள் விளையாடுவதை பார்க்கும் போது தெளிவாக தெரியும். அதனாலேயே அவர்கள் கோப்பையை வெல்லவில்லை. இதுவே உண்மை” என்று கூறினார்.



